fbpx
Connect with us

Cinemapettai

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா

தமிழ்த் திரையுலகில் `இசை’யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி’ இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி’ மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

தமிழ்த் திரையுலகில் `இசை’யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி’ இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி’ மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

“அன்னக்கிளி” படத்தில் “அன்னக்கிளி உன்னைத்தேடுதே”, “மச்சானைப் பார்த்தீங்களா” எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

“நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி’ ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் “இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்” என்று கூறியிருக்கிறார்.

அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்’ அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. “நீங்க என்ன சொல்றீங்க?” என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

பதிலுக்கு அப்பா, “எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா’ என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா’வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த “லைலா மஜ்னு.” இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா’ என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா’ என்று எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

இந்தப் படத்தின் பாடல்களால் – நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top