fbpx
Connect with us

Cinemapettai

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா?

chennai test matches

News | செய்திகள்

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா?

சென்னை

எப்போதும்  பிரியாதது எதுவென கேட்டால் சென்னையும் கிரிக்கெட்டும் என  உடனடியாக சொல்லிவிட முடியும் . கிரிக்கெட்டுக்கு எப்போதும் நிபந்தனையற்ற  ஆதரவு வழங்குவது சென்னை தான். அது சென்னை சூப்பர் கிங்ஸோ, சென்னை 600028 திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

இந்திய  அணிக்காகட்டும், சச்சின், ஷேவாக், தோனி போன்ற நட்சத்திர வீரர்களாகட்டும் எல்லோருக்கும் திருப்பம் தருவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் தான்.  ஆஸ்திரேலியாவிற்கு சிட்னியை போல, இந்தியாவிற்கு சென்னை மைதானத்தை குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே சென்னையில், கிரிக்கெட்டை நேசிக்கும் அந்த அன்பான ரசிகர்களின் முன்னிலையில் ஒரு போட்டியாவது விளையாட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கும்.

சென்னை  போட்டி என்றாலே தரமான மேட்ச் என்பது தான் வரலாறு. அதனால் தான் எதிரணியினர் கூட சென்னையில் மேட்ச் என்றால் ஆர்வமாக விளையாடுவார்கள். தற்போது நடந்து வரும்  இந்திய இங்கிலாந்து போட்டி, ஆரோக்கியமான டெஸ்ட் போட்டியாக நடந்து வருவதை மறுக்க முடியாது. இந்த மேட்ச் எப்படி ரிசல்ட் தரும் என கணிக்க முடியாமல் கிரிக்கெட் நிபுணர்கள் தடுமாறுகிறார்கள். ஏனெனில் இரண்டு அணிகளுக்கும் சம வாய்ப்பை வழங்கும் பிட்ச் இது. இந்த நேரத்தில் சென்னையில் நடந்த மறக்க முடியாத டெஸ்ட்கள்  பற்றி கொஞ்சம்  அசை போட்டுப்பார்ப்போமா ?

1. முதல் டெஸ்ட் வெற்றி :-

இந்தியா கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது  ஆண்டுகள் நிறைவடைந்திருந்தது. ஆனால் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதேயில்லை. ஒட்டுமொத்தமாக இந்தியா தனது 25வது டெஸ்ட் போட்டியை 1952 ஆம் ஆண்டு சென்னையில் ஆடியது. எதிரணி இங்கிலாந்தோ மிகுந்த தெம்புடன் களமிறங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து 266 ரன்களை எடுத்தது. வினூ மங்கட் முதல் இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். பாலி உமரிக்கர், பங்கஜ் ராய் இருவரும் அபாரமான சதங்களை விளாச, இந்தியா 457 ரன் குவித்தது. குலாம் அகமது, வினூ மங்கட் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங்கில் போட்ட கிடுக்கிப்பிடியால்  183 ரன்களுக்கு  இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது  இங்கிலாந்து. இதையடுத்து கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அரங்கில் முதல் வெற்றியைச்  சுவைத்தது இந்தியா.  அதுவும் சாதாரண வெற்றியல்ல, இன்னிங்ஸ் மற்றும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

2. ‘டை’  ஆன   டெஸ்ட் போட்டி :-

சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1986இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 18-22 வரை நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்களை குவித்தது.  டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும்,கேப்டன் ஆலன் பார்டர், டேவிட் பூன்  சதமும் விளாசினர். 502 நிமிடங்கள் களத்தில் இருந்து 330  பந்துகளைச் சந்தித்து 210 ரன் எடுத்த டீன் ஜோன்ஸ், கடும் சோர்வால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது அப்போது பெரிய பரபரப்பான செய்தியாக இருந்தது.

இந்திய அணியில் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன்  அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக ஒரு சதம் விளாசினார். கபில்தேவ் புண்ணியத்தால் இந்தியா ஃபாலோ  ஆனை தவிர்த்து மட்டுமில்லாமல் 397  ரன்களையும் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 170   ரன்களுக்கு தைரியமாக  டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது  இந்திய அணி. ஆனால் 347 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து வரலாற்றில் முதன் முறையாக  இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது. ஒட்டுமொத்தமாக உலகில் ‘டை’ ஆன இரணடாவது டெஸ்ட் போட்டி இது.

3. ஹிர்வானியின் மெகா சாதனை :-

1988 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில்,  ஏழாவது வீரராக களமிறங்கிய கபில்தேவ் அதிரடியாக அடித்த சதத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் குவித்தது. W .V  ராமன், அஜய் ஷர்மா, நரேந்திர ஹிர்வானி ஆகிய மூன்று இந்திய வீரர்கள்  இந்த டெஸ்டில் தான் அறிமுகம் ஆனார்கள்.  நரேந்திர ஹிர்வானி முதல் இன்னிங்ஸில் வெறும் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹிர்வானியின் கூக்ளியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் எட்டு பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தார்கள். இந்த போட்டியில் ஹிர்வானியின் பந்தில் மட்டும் ஆறு பேர் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அறிமுகமான முதல் போட்டியிலே ஒட்டுமொத்தமாக 16 விக்கெட்டுகளை எடுத்து ஹிர்வானி உலக சாதனை படைத்தார். இந்தியா 255 ரன்கள் வித்தியாசத்தில் மேட்ச்சை ஜெயித்தது.

4. ஷேவாக்கின் ருத்ர தாண்டவம் :-

 

 

2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. முதல் இன்னிங்ஸில்  அம்லா அபாரமாக ஆடி 159 ரன்கள் எடுத்தார், மெக்கன்சி, ஸ்மித், பவுச்சர் ஆகியோர் அரை  சதங்களை  விளாசித்தள்ள  540 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா.

இரண்டாவது நாளின் முடிவில் இந்தியா 21 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் அரைசதம் எடுத்து களத்தில் இருந்தார். மூன்றாவது நாளில் ஷேவாக் ஆடிய ஆட்டம் மெர்சல். அன்றைய தினம் இந்திய அணியின் சார்பில் வாசிம் ஜாபர்  மட்டும் தான் அவுட் ஆகியிருந்தார். கடினமான மூன்றாவது நாள் பிட்சில் அன்றைய தினம் 257 ரன்களை  குவித்தார் ஷேவாக், அது மட்டுமன்றி வெறும் 278 பந்துகளில் முச்சதம் கடந்து மெகா சாதனை புரிந்தார். 309 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தவர் மறுநாள் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் 319 ரன்னில் அவுட்டாகிச் சென்றார். டான் பிராட்மேன், லாரா ஆகியோருக்கு பிறகு டெஸ்டில் இரண்டாவது முறையாக முச்சதம் அடித்த  வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த இன்னிங்ஸில்  ஷேவாக்கின் ஸ்ட்ரைக் ரேட் 104.93 என்பது குறிப்பிடத்தக்கது. ஷேவாக்கின் முச்சதம், டிராவிடின் சதம் ஆகியவற்றின் துணையோடு 627 ரன்களை குவித்தது இந்தியா.  மூன்றாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 331/5 குவித்திருந்த போது ஐந்து நாள் முடிந்து ஆட்டம் டிரா ஆனது.

5. பாகிஸ்தானை கவுரவித்த சென்னை ரசிகர்கள் :-

1999ம் ஆண்டு நடந்த சென்னை டெஸ்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்கவே முடியாத போட்டி இது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 238  ரன்னும், இந்தியா 254 ரன்னும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் அப்ரிடி முரட்டுத்தனமான ஒரு சதம் எடுக்க, பாகிஸ்தான் 286 ரன்களை குவித்தது.

271 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆறு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்தது  இந்தியா, அடுத்தாக பத்து ரன்னில் டிராவிடும்  நடையை கட்டினார். அசாருதீன் 7, கங்குலி 2 ரன் எடுத்தனர். இந்தியா  82/5  என தத்தளித்தது. சச்சின் விடாப்பிடியாக போராட ஆரம்பித்தார். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக்  ஆகியோருக்கும் சச்சினுக்கு ஒரு பெரும் போர் நடந்தது என்றே சொல்லலாம். மோங்கியாவுடன் இணைந்து சச்சின் போராடிய ஆட்டம், ரசிகர்களை எமோஷனல் ஆக்கியது. மோங்கியா 52 ரன்னில் அவுட் ஆனார். 253/6 என்ற நிலை இருக்கும் போது சக்லைன் முஷ்டாக் பந்தில் சச்சின் அவுட் ஆனார்.

வெறும் 18 ரன் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் சச்சின் அவுட்டாக, அந்த அதிர்ச்சியில் இருந்து  ரசிகர்கள் மீள்வதற்குள்  மீதி மூன்று பேரும் அவுட்டாக 258 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. 12 ரன் வித்தியாசத்தில் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வி அடைந்தது இந்திய அணி. 405 நிமிடங்கள் களத்தில் இருந்து 273 பந்துகளை சந்தித்து 136 ரன்கள் குவித்த சச்சினின் ஆட்டம் வீண் போனது. 1999 என்பது இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய ஆண்டாகும். இந்த ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சித்  தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் எதாவது கலவரத்தில் ஈடுபடுவார்கள் என எல்லாரும் நினைத்தனர். ஆனால் வழக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் வீரர்களுக்கு எழுந்து நின்று மைதானம் முழுவதும் பலத்த கரகோஷம் எழுப்பினர்  தமிழக ரசிகர்கள். இதைச் சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் வீரர்கள் நெகிழ்ந்து போயினர். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய அணி சென்னையில் தோல்வி அடைந்த ஒரே டெஸ்ட் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

6. மாபெரும் சேஸிங் :-

டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில்  275 ரன்களை  சேஸ் செய்வது என்பதே பெரிய சவால்,  அதுவும் சுழற்பந்துக்கு சாதகமான இந்திய மண்ணில் 200 ரன்களை சேஸ் செய்வதற்கே மிகவம் சிரமப்பட வேண்டியதிருக்கும். 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் இந்தியாவும் மோதின. மும்பை தாஜ் தாக்குதலுக்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டி இது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஸ்டிராஸ் எடுத்த அபார சதத்தால் 316  ரன்களை குவித்தது இங்கிலாந்து. இந்திய அணியில் தோனி, ஹர்பஜன் இணை அபாரமாக விளையாடியதால் முதல் இன்னிங்ஸில் 241 ரன்களை எடுத்தது இந்தியா.

ஸ்டிராஸ், காலிங்வுட் இருவரும் சதமெடுத்து 108 ரன்களில் அவுட்டாக, மேட் பிரியர் 33 ரன்களை எடுத்தார், இந்த மூவரைத் தவிர  மற்ற யாருமே இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. 311 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது இங்கிலாந்து. பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் இந்தியாவுக்கு நான்கு செஷனில் 387 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்கு செஷன் ஆடுவது என்பது சிரமமான காரியம், இந்தியா தோல்வியைத் தவிர்க்க மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்றே எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஷேவாக்கின்  பிளான் வேறு மாதிரியாக இருந்தது.

நான்காம் நாளின் கடைசி செஷனில் இந்தியா பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஷேவாக் பவுண்டரிகளாக வெளுத்தார். 5.3 ஓவரில் 50 ரன்னை கடந்தது இந்தியா. ஒருநாள் போட்டியை காட்டிலும் அதிவேகமாக இந்தியா அடித்து ஆட ஆரம்பித்தது அப்போது தான். 32 பந்தில் அரை சதம் எடுத்து ஷேவாக் மாஸ் காட்டினார்.17.6 ஓவரில் நூறு ரன்களை கடந்தது இந்தியா. ஷேவாக் 68 பந்தில் 11 பவுண்டரி, நான்கு சிக்ஸர் விளாசி 83 ரன்களைக் குவித்தார். 29 ஓவர் முடிவில் இந்தியா 131/1 என இருந்தது. இங்கிலாந்து அணியினருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஷேவாக் தந்த அதிர்ச்சியில் மீள்வதற்குள் மறுநாள் சச்சினும், யுவராஜும் இணைந்து மேட்சை முடித்தனர். சச்சின்  வின்னிங் ஷாட் அடித்து சதமும் கடந்தார். நான்காவது இன்னிங்ஸில்  சச்சின் சதமடித்து இந்தியா ஜெயித்த முதல் போட்டி அதுதான். சச்சின் தனது  வாழ்க்கையில் மறக்கவே முடியாத இன்னிங்ஸ் இது என குறிப்பிட்டார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்டிராஸ், சதங்கள் கண்ட காலிங்கவுட், டெண்டுல்கர் ஆகியோருக்கு  ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை.  ஷேவாக் விருதை வென்றார். இந்திய மண்ணில், இன்றளவும் டெஸ்டில் பெஸ்ட் சேஸிங் மேட்ச் இது தான்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்த எட்டு வருடங்களில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தான் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. அதில் தோனி இரட்டை சதமடிக்க, இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பின்னர் நடக்கும் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து – இந்தியா போட்டி தான். இந்த மேட்சும் வரலாற்றில் இடம்பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top