சென்னை மாநகரம் பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008-ம் ஆண்டு 2-வது மிகப்பெருந் திட்டத்தை வெளியிட்டது.

அதன்படி வருகிற 2026-ம் ஆண்டில் மக்கள் தொகக 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியை சமநிலைப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அங்கும் மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இது போன்ற காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் மிக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பல தொழிற்சாலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அங்கு ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டிய நிலை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 2 மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது.

இத்தகவலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம் சரிசமமான வளர்ச்சியும், ஒருங்கிணைந்த நகர வளர்ச்சியும் ஏற்படும் என்றார்.

சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டர் ஆக விரிவடையும். இதன் மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

இப்போது சென்னை பெருநகருடன் திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களின் சில பகுதிகள் இணைந்துள்ளன. தற்போது இம்மாவட்டங்கள் முழுவதும் சென்னையுடன் இணைகின்றன.

இத்திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு சென்னை பெருநகரை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்கள் இதே போன்று விரிவாக்கம் செய்யப்பட்டு முறையான வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டில் உள்ள பெருநகரங்களான மும்பை 4,354 சதுர கி.மீட்டர் பரப்பளவு உள்ளது.

ஐதராபாத் 7,100 சதுர கி.மீட்டர் பரப்பளவும், பெங்களூர் 8,005 சதுர கி.மீட்டர் பரப்பளவுடனும் உள்ளன. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பெரிய பெருநகரமாக சென்னை மாறுகிறது.