சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் சாக்லேட் பாய் மாதவன் நடிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முரட்டுத்தனமான கெட்டப், உடல்மொழி என துல்கரின் மேஜிக். பார்வதியின் அசரடிக்கும் நடிப்பு என இருவரையும் வைத்து விளையாடி இருந்தார் இயக்குனர் மார்ட்டின் பிரகாட். ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவு செய்து இருந்தார். கோபி சுந்தரின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

யார் என்றே தெரியாத ஒருவனைத் தேடி ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் முடிவை தெரிந்து கொள்ள நாயகி செய்யும் பயணமே கதை. முக்கியத்துவமே இல்லாத அந்தப் பயணம் அத்தனை அழகாக, சுவாரஸ்யமாக நீள்வதே படத்தின் ஜீவன். வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் படம் மாஸ் ஹிட் அடித்தது. அத்தனை அற்புதமாக உருவாக்கப்பட்டு இருந்த இப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 8 கேரள அரசின் விருதுகள் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சார்லி ஒரிஜினல் வெர்சனை இயக்கிய ஜோமன் டி ஜானே இப்படத்தையும் இயக்க இருக்கிறார். ப்ரமோத் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. சார்லி வேடத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுப்புகள் நிலவியது. தற்போது, இப்படத்தில் நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாக்லேட் பாயாக அறிமுகமானவர் மாதவன். தமிழில் இறுதிச்சுற்று படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த மாதவன், முரட்டுத்தனமாக தமிழ் ரசிகர்களுக்கு புது ட்ரீட் கொடுத்தார்.

ஆனால், சார்லி படத்தில் முக்கிய கதாபாத்திரம் பார்வதியுடையது தான். அவரின் கதாபாத்திரத்தை எந்த நடிகை ஏற்க இருக்கிறார் என ஆவல் கிளம்பி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.