சென்னை அண்ணாசாலையில் ஏற்பட்ட விரிசல் போன்று, வண்ணாரப்பேட்டையிலும் விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் கலவை வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ.19000 கோடி முதலீட்டில், 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மெட்ரோ ரயில் பாதை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை கடற்கரையில் இருந்து, அண்ணாநகர், கோயம்பேடு வழியாக, பல்லவாரம் வரை ஒரு வழித்தடமும், வண்ணாரப்பேட்டையில் இருந்து, அண்ணாசாலை, கிண்டி வழியாக, இன்னொரு வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், முதல்கட்டமாக, கோயம்பேடு முதல் கிண்டி வரையான பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணசாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக, அவ்வப்போது, சாலையில் விரிசல் மற்றும் பள்ளம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

சில நாட்கள் முன்பாக, அண்ணாசாலையில் பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டு, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து, விரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, லாலாகுண்டா, முத்தையா மேஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று வீடுகள் குலுங்கின. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து, பொதுவெளியில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும், சாலையில் ஓட்டை ஏற்பட்டு, அதில் இருந்து சிமெண்ட் கலவை வழிந்தோடியதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மெட்ரோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.