Connect with us
boomerang-movie

ரஜினி, விஜய் வந்த கார் என்னென்ன.. அதவிடுங்க.. வெற்றிமாறன் எதுல வந்தார் தெரியுமா

News | செய்திகள்

ரஜினி, விஜய் வந்த கார் என்னென்ன.. அதவிடுங்க.. வெற்றிமாறன் எதுல வந்தார் தெரியுமா

விகடன் சினிமா விருது நிகழ்ச்சியில், உள்அரங்கம் மட்டுமின்றி வெளியே பார்க்கிங் ஏரியாவும் திக்குமுக்காடிப் போனது. காரணம், விழாவுக்கு வந்திருந்த வி.ஐ.பி.களின் கார்கள். அதாவது கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட கார்கள்! ‘செம டிராஃபிக்’ என்று சில வி.ஐ.பி.க்கள் செல்லமாக நெட்டி முறித்தாலும், ஒவ்வொருவரும் செம ஜாலியாகவே காரிலிருந்து இறங்கினர். மேடைக்கு உள்ளே நடந்தததன் முன்னோட்டத்தை சன் டிவியில் அல்லது யூ ட்யூபில் பார்த்திருப்பீர்கள். அரங்கத்துக்கு வெளியே நடந்த சில ஹைலைட்டான விஷயங்கள்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆர்.ஜே.பாலாஜியும், மதன் கார்க்கியும் முறையே க்ரூஸிலும் இனோவாவிலும் வந்து இறங்கினார்கள். ‘‘சீக்கிரம் வந்துட்டானே, பெர்ஃபெக்ட்னு நினைக்காதீங்க… செம டிராஃபிக்கா இருக்கும்னு தெரியும்… அதான் முன்னாடியே வந்துட்டேன்’’ என்று வழக்கம்போல் தனது டிரேட்மார்க் நக்கலில் ஸ்கோர் செய்தார் பாலாஜி.

இயக்குநர் பாரதிராஜாவிடம் BMW இருக்கிறது. ‘இது காரா இல்லை ஃப்ளைட்டாப்பா… எவ்வளவு செலவழிச்சாலும் பத்தமாட்டேங்குது..’ என்று ஏற்கெனவே BMW பற்றிச் சொன்ன இயக்குநர் இமயம், இப்போது லேட்டஸ்ட்டாக ஆறு கியர்களைக் கொண்ட இனோவா க்ரிஸ்டா வாங்கியிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து, தனது BMW காரில் இருந்து இறங்கியவர், உள்ளே இருந்த கூட்டத்தைக் கண்டதும் இப்படிச் சொன்னார். ‘‘வெளியே போக்குவரத்தில் இருந்து மீண்டு பத்திரமாக வந்துவிட்டேன். அரங்கத்தில் உள்ள போக்குவரத்தைத் தாண்டி என்னை அமரச் செய்வது உங்கள் பொறுப்பு!’’

* இயக்குநர்களுக்கு ஜாகுவார்தான் பிடிக்கும்போல. ‘என்னை ரொம்ப வேலை வாங்கிய இயக்குநர்கள்’ என்று ‘முத்து’ சமயத்திலும், ‘கபாலி’ சமயத்திலும் ரஜினியால் பாராட்டப்பட்ட கே.எஸ்.ரவிக்குமாரும் ரஞ்சித்தும் ஜாகுவார் XF காரில் வந்திறங்கினார்கள்.

அல்லாருக்கும் ஹேப்பி பொங்கள்ள்’ என்று மழலை மொழியில் வாழ்த்திய ”சிறந்த குழந்தை நட்சத்திரம்” நைனிகா, தனது அம்மா மீனாவுடன் ஃபார்ச்சூனரில் வந்தார். உயரமான கார் என்பதால், இறங்கும்போது கால்கள் எட்டாமல் அம்மாவைத் தூக்கச் சொல்லிக் கொஞ்சிய ‘தெறி’ பேபிக்கு ஃபார்ச்சூனர்தான் பிடிச்ச காராம். இது தவிர குஷ்பூ, இயக்குநர் ஹரி போன்றோரும் ஃபார்ச்சூனரில் வந்திறங்கி கெத்து காட்டினர். ‘‘நான்தான் சொன்னேன்ல வந்துடுவேன்னு… ஃப்ளைட்ல இறங்கி ஏர்போர்ட்ல இருந்து அப்படியே வர்றேன்’’ என்று வழிநெடுக செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே வந்தார் குஷ்பூ!

‘சிறந்த வில்லி’ விருது வென்ற விஜி சந்திரசேகரின் கணவர் ஒரு பைலட். கணவருக்கு விமானம் ஓட்டுவது தொழில் என்றால், ‘வெற்றிவேல்’ விஜிக்கு கார் ஓட்டுவது ஹாபி. நிகழ்ச்சிக்காகவே அமெரிக்காவில் இருந்து, பயணத்தை முன்தேதிக்கு மாற்றியவர் விழா அன்று காலைதான் வந்திறங்கினார். ‘‘ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நானே கார் ஓட்டிட்டு வந்துடுறேன்’’ என்றவர், சொன்னபடி அவரே தனது BMW M3 காரை செல்ஃப் டிரைவ் செய்து கொண்டு வந்தார். ‘‘கார் ஓட்டுறது ரொம்பப் பிடிக்கும். ஆனா இன்னைக்குக் கொஞ்சம் டிராஃபிக் அதிகம்’’ என்றார் விஜி. நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் தனது XUV 5OO காரை செல்ஃப் டிரைவ் செய்துகொண்டு வந்தார்.

‘‘மேடியும் நானும் புரொடியூஸர்ஸும் ஹூண்டாய் வெர்னா கார்ல வந்துடுவோம்’’ என்று நமக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தார் ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா. ஆனால், மாதவன் வந்ததோ பென்ஸில். கார்த்தியும் முதலில் பென்ஸ் வைத்திருந்தார். அவரது பென்ஸை, தான் வாங்கிக் கொண்டு கார்த்திக்கு ஆடி க்யூ7 காரை ஒப்படைத்தார் அப்பா சிவக்குமார். ரொம்ப நாளாக பென்ஸ் பயன்படுத்தி வந்த நடிகர் சிவகுமார், விகடன் விருது விழாவுக்கு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் வந்தார். ஒளி ஓவியரும் இயக்குநருமான தேனி ஈஸ்வரும், இசையமையப்பாளர் சந்தோஷ் நாராயணனும், இயக்குநர் பாலாவும், தத்தமது பென்ஸ் E க்ளாஸ் கார்களில் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக வந்த ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகாசிங், சென்னையில் ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார் என்பதால், வாடகை பென்ஸில் வந்தார். ‘‘ஐ லவ் தமிழ் மக்கள் அண்ட் ஜெர்மன் ஆடி’’ என்றார் ரித்திகா. சின்ன வயதில் இருந்தே ஆடியின் மீது, ஒரு கண் இருப்பதாகச் சொன்னார் இந்த நாக் அவுட் நாயகி. அதே போல ”கிடாரி” படத்தில் தனது குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை சுஜா வருணி, மாருதி சுஸூகி பெலினோ காரில் வந்திறங்கினார்.

* விழாவில் இனோவா காரைத்தான் அதிகம் பார்க்க முடிந்தது. பாரதிராஜா, பொன்வண்ணன்-சரண்யா, இயக்குநர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இயக்குநர் சசிக்குமார் போன்றவர்கள் அனைவரும் இனோவாவில்தான் வந்தனர். ‘‘டிராஃபிக் இல்லாம சென்னையா? இனோவாதான் புகுந்து புகுந்து வர ஈஸியா இருக்கு’’ என்றார் தமிழ் சினிமாவின் வெகுளி அம்மா சரண்யா.

* இயக்குநர் சமுத்திரக்கனி படப்பிடிப்பு முடிந்த கையோடு, ஜல்லிக்கட்டு டீ-ஷர்ட் அணிந்து தனது ரேஞ்ச்ரோவர் காரில் வந்திருந்தார்.

இயக்குநர் லிங்குசாமியிடம் இருப்பது ரேஞ்ச்ரோவர் இவோக். ‘ரஜினிமுருகன்’ படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் வந்து இறங்கும் ரேஞ்ச்ரோவர், சாட்சாத் லிங்குவின் காரே! ஆனால், தயாரிப்பாளர் கவுன்சில் மீட்டிங்கை முடித்துவிட்டு தனது நண்பர் விக்ரமனுடன் லிங்குசாமி வந்திறங்கியது, இனோவாவில்!

நடிகர் சங்கத் தலைவர் நாசர், BMW 3 சீரிஸில் வந்திருந்தார்.

* எந்தப் பரபரப்புக்கும் இடம் கொடுக்காமல் தனது BMW 7 சீரிஸ் காரில் இருந்து ரகசியமாகவே இறங்கி, ரகசியமாகவே விழா மேடை ஏறினார் கமல். ரேஞ்ச்ரோவர் இவோக், ஆடி A8, ஹம்மர், லேண்ட் க்ரூஸர் பிரேடோ என்று பல சொகுசு கார்களின் உரிமையாளர் கமல். சினிமாவைப் பற்றி மட்டுமல்ல; கார்களைப் பற்றிப் பேசினாலும் உற்சாகமாகி விடுவார். செடான் கார்களைவிட, ஹம்மர், லேண்ட்க்ரூஸர் என ரஃப் அண்ட் டஃப் எஸ்யூவி-களின் மீதுதான் அதிக ஈர்ப்பாம் உலகநாயகனுக்கு.

வரும் ஞாயிறு (05.01.2017) சன்.டிவி யில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில ரஜினி, விஜய் உடன் நிற்க சிவகார்த்திகேயன் மேடையில் ரஜினி வாய்ஸில் பேசிக் கலக்கினதைப் பார்க்கலாம். எஸ்.. முழு நீள வசனம் ஒன்றைப் பேசி ‘எச்சச்ச… கச்சச்ச’ என்று ரஜினி வாய்ஸில் கலக்கிய சிவகார்த்திகேயன், ‘கேடி பில்லா’, ‘மெரினா’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஸ்கோடா அல்லது ஃபோக்ஸ்வாகன் கார்கள் வாங்கலாம் என்ற ஐடியாவில் இருந்தார். ‘உங்க யோகம்… நீங்க ஆடி கார்ல போவீங்க’ என்று ‘ரஜினிமுருகன்’ படத்தில் ஜோஸியர் சொன்னது, சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகிப் போனது. ஆம்! சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடி Q7 கார் வாங்கினார் சிவகார்த்திகேயன். விகடன் விருது விழாவுக்கு தனது இன்னொரு காரான வெள்ளை நிற 60 லட்ச ரூபாய் ரேஞ்ச்ரோவர் இவோக்கில் பம்மியபடி வந்திறங்கினார் சிவகார்த்திகேயன். ‘‘சொல்லியிருந்தா நானும் ரேஞ்ச்ரோவர்லயே வந்திருப்பேனே நண்பா. பெட்ரோலும் சேமிச்சிருப்பேன்’’ என்று ரெனோ டஸ்ட்டர் காரில் வந்த சதீஷ்,காமெடி பண்ண, கலகலவென சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் இருவரும் .

ரேஞ்ச்ரோவர் அல்லது ரோல்ஸ்ராய்ஸில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய், மிக எளிமையாக ரஜினி ஸ்டைலில், கருப்பு நிற மாருதி ஸ்விஃப்ட்டில் வந்து இறங்கினார். மேலே படத்தில் விஜய்க்குப் பின்னால் இருப்பது அவர் வந்த கார் அல்ல. அவரிடம் வெள்ளை நிற காரே கிடையாது. கருப்பு, சிவப்பு அல்லது க்ரே விரும்பி அவர்! யெஸ்… விஜய்யும் ஒரு கார் ஃப்ரீக்தான். ஆடி, ஹம்மர், ரோல்ஸ்ராய்ஸ், ரேஞ்ச்ரோவர் இவோக், நிஸான், ஜாகுவார் என்று பல சொகுசு கார்கள் வைத்திருந்தாலும், விஜய் உள்ளூரில் பயன்படுத்த தனது மினிகூப்பரைத்தான் எடுப்பாராம். ரோல்ஸ்ராய்ஸ், ரேஞ்ச்ரோவர் காரில் சென்றால், சாலைகளில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பதால், மினிகூப்பர்தான் லோக்கலில் விஜய்யின் சாய்ஸ். சாதாரண ஸ்விஃப்ட் சைஸில் இருக்கும் இந்த மினிகூப்பர், தனவான்களின் காஸ்ட்லியான குட்டி கார். இதன் விலை 45 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

எளிமைதான் ரஜினியின் ஸ்பெஷல். இனோவாவில்தான் ரஜினி வருவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென ஒரு கறுப்பு நிற BMW காரைச் சுற்றி ஃப்ளாஷ்கள் அடிக்க, தனது ஃபேவரைட் சுறுசுறுப்புடன் கம்பீரமாக இறங்கினார் சூப்பர் ஸ்டார். இந்த BMW X3, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கார். என்றோ ஒரு நாள் மகள்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நாங்கள்லாம் காஸ்ட்லி கார் பயன்படுத்துறோம்… நீங்க மட்டும் அம்பாஸடர், இனோவானு சிம்பிளா இருக்கீங்களே அப்பா.. ஏன்?’ என்ற மகள்களின் கேள்விக்கு, ‘’உங்க அப்பா சூப்பர் ஸ்டார்; என் அப்பா சாதாரண போலீஸ் ஏட்டுதானே” என்று தனது டிரேட்மார்க் சிரிப்புடன் பதில் அளித்தாராம் ரஜினி!

* இது தவிர, போர்ஷே, பென்ட்லி என்று பல வெளிநாட்டு கார்கள் பார்க்கிங்கை அலங்கரித்தாலும், அனைவரின் அப்ளாஸையும் அள்ளியது, சிறந்த இயக்குநர்-திரைக்கதை ஆசிரியர் விருதுகளை வாங்கிக் குவித்த வெற்றிமாறன்தான். வரிசையாக கார்கள் வந்து கொண்டிருந்த பாதையில் ஒரு பைக் ஓரமாக வந்து கொண்டிருக்க, ‘‘பைக்லாம் அப்படிப் போங்க’’ என்று வேலட் பார்க்கிங்கினர் கறார் காட்டினர். தடாலென ஹெல்மெட்டைக் கழற்றி பைக்கிலிருந்து இறங்கியது சாட்சாத் வெற்றிமாறன்தான்! வாயடைத்துப் போய் ‘‘கார் என்னாச்சு சார்?’’ என்றால், ‘‘BMWவா? அது இன்னைக்கு கொஞ்சம் வெளி வேலைக்காகப் போயிடுச்சு. அதான் பைக்ல கிளம்பிட்டேன்! பைக்கும் இல்லேன்னா சைக்கிள்ல வந்துருப்பேன். எனக்கு மூணுமே ஒண்ணுதான் பாஸ்!’’ என்று அசால்ட்டாகச் சொன்னார். பொல்லாதவன் பல்சரா என்று பார்த்தால்.. அது யமஹா ஃபேஸர்! இன்னொரு விஷயமும் சொன்னார். “எனக்கு 28-வது வயசு வரைக்கும் பைக்கே ஓட்டத்தெரியாது ப்ரதர்!’

நீங்க கலக்குங்க ப்ரதர்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top