Tamil Cinema News | சினிமா செய்திகள்
CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இந்தி கட்டாயம்.! தமிழ், தெலுங்கு மொழிகள் நீக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு பட்டியலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் நீக்கப்பட்டிருப்பது தேர்வு எழுதுவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CBSE எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் கேந்திர வித்யாலாயா மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்ய சிடிஇடி எனப்படும் மத்திய அரசின் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான 2 தேர்வுகளில் இதுவரை ஆங்கிலத்தை முதன் மொழியாகவும், தமிழை அல்லது பிராந்திய மொழியை 2வது மொழியாகவும் பெரும்பாலானோர் தேர்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஏதேனும் 2 மொழியையே தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் தென் இந்திய மாநிலங்களில் உள்ளவர்கள் குறிப்பாக தமிழர்கள், ஏற்கனவே சிபிஎஸ்இ.யில் இந்தி பயின்றவர்களுக்கும், வடமாநிலவர்களுக்கும் போட்டி போட முடியாமல் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே பிராந்திய மொழிகளை நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
