Tamil Nadu | தமிழ் நாடு
காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி.. ஒகேனக்கலில் ஓடும் பெருவெள்ளம்
கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்தடைந்தது.
தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பியதால், அணைகளுக்கு வரும் தண்ணீரானது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது நேற்று இரவு கர்நாடக மாநில எல்லையான பில்லிகுண்டுலுவை வந்தடைந்தது. நேற்று இரவு 35 கன அடியாக வந்த தண்ணீர் படிபடியாக உயர்ந்து தற்போது 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் நீரீனால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்வான பகுதிகளுக்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
