fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” – மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” – மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா

43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து,

“என்னா இருக்கு” என்றார்,

“ம்ம்..கடை கீது”  என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண்.

லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை “அட இன்னாம்மா நீயி.. அக்கா பொறிக்கிற மீன் வாசனை மெரினா பூராம் அடிக்குது. பாத்துகிட்டே கேக்குறீயே” என்றபடி சமாதானம் சொல்லி தட்டில் சோற்றைப் போட்டு  கொடுக்கிறார் சுந்தரி அக்கா. கடலில் குளித்த பசியில் சோற்றை அள்ளி உண்ணும் பெண்ணின் முகம் மாறுகிறது. அதன் ருசி அவரைக் கவர்ந்து விட்டதைக் காட்டிக் கொடுக்கிறது கண்கள்.

“சோறு எவ்வளவு” என்கிறார்.

“30 ரூபாதாம்மா..பயப்படாமா சாப்பிடு” என்கிறார் சுந்தரி

‘சுந்தரி அக்கா’ கடைக்கு மதியம் 12 மணியில் இருந்து ஒன்றிரண்டாய் ஆட்கள் வரத்தொடங்கிவிடுகிறார்கள். ஆட்டோக்காரர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், சிறுசிறு வியாபாரம் செய்பவர்கள் என அடிமட்ட மக்கள் கூடிவிடுகிறார்கள். இந்தக் கடையில் சாம்பார் முதல் கருவாட்டுக்குழம்பு வரை எதுவுமே சுமார் ரகமில்லை. எல்லாமே சூப்பர்தான்.

“எம் புள்ள கண்ணன்தான் இங்க கடை போடுறதுக்கு காரணம். இவன் சின்ன வயசில ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் மெரினாவில இருக்கிற கடைக்கு சாப்பாடு கொடுக்குற வேலைக்கு வந்துடுவான். வீட்டுக்காரரு ட்ரைவர் வேலைக்கு போய்டுவாரு. நான் வீட்டுக்கிட்டவே இட்லிக்கடை போட்டிருந்தேன்.” என்று சுந்தரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அக்கா இறா கொடு” என தட்டுடன் ஒருவர் வந்துவிட கண்ணன் தொடர்ந்தார்.

சுந்தரி அக்கா கடை

“அப்பல்லாம் இங்க பகல்ல ‘பெரியவர் வீரமணி’  வருவார். அப்படி வரும்போதெல்லாம் என்னை ஸ்கூல் யூனிபார்மோடவே பார்த்திருக்காரு. ஒரு நாள் என்னைப் பக்கத்தில வரச்சொல்லி ‘ஒரு வண்டி கொடுக்கச் சொல்றேன். கடை போட்டு வியாபாரம் பார்த்துக்கோ’ன்னு சொல்லிட்டு போய்ட்டார். வண்டியில் திண்பண்டம், டீக்கடைன்னு போட்டு அப்படியே சோத்துக்கடையும் ஆரம்பிச்சாச்சு. அம்மா வந்து கடையை  பாத்துக்கிட்டு, என்னை கேட்டரிங் படிக்க வச்சது. 17 வருஷமா இங்க கடை போட்டிருக்கோம்.” என்றார்.

“எதைச் செஞ்சாலும் நம்மால முடிஞ்ச அளவுக்கு ஒழுங்கா செய்யணும்ன்னு நினைப்பேன். எனக்குத் தெரிஞ்சதை சமைச்சு வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கும்போது, என் ஒரு பையனை கேட்டரிங் படிக்க வச்சேன். அவன் படிச்சு வந்த பிறகுதான் கலப்படம் இல்லாத பொருட்களை எப்படி வாங்குறது; கடையில வாங்குறதைவிட நாமே தயாரிக்கிற மசாலா பொருட்களில்தான் செலவு குறைவு தரம் அதிகம்ன்னு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தான். நான் இங்க எல்லாத்துக்குமே செக்குல ஆட்டின கடலை எண்ணைதான் பயன்படுத்துறேன். பல ஊருக்காரங்க வர்ற இடம். வேற காரணத்துக்காக வயிறு வலிச்சாலும் சாப்பாடு சரியில்லைன்னுதான் பேசுவாங்க. அதனால லாபம்லாம் கணக்கு பாக்காம, சமைக்கிறது மீன் பொரிக்கிறதுன்னு எல்லாமே கடலை எண்ணையிலதான். எனக்கு காசு முக்கியமில்ல தம்பி” என்றவரிடம் மீன் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்கிறதுன்னு கேட்டோம்.

“காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு நேரடியா போய் நல்ல மீனா பார்த்து  வாங்கிட்டு வருவேன். இப்ப மீன்பிடி தடைக்காலம் என்பதால மீன் வரத்தே இல்ல. அலைஞ்சு திரிஞ்சு வள்ளத்துல போய் பிடிச்சு வர்ற மீனுங்களா பார்த்து வாங்கிட்டு வந்தேன். இன்ன மீனுதான் கிடைக்கும், இன்ன விலைதாம் அப்படிங்கிறதே இல்ல. இன்னைக்கு என்ன மீன் ப்ரஷ்சா இருக்கோ அதைதான் வாங்குவேன். மீனு விலைக்கு தகுந்த விலையைதான் வச்சு விக்கிறது. இன்னைக்கு கருப்பு வவ்வால் பொறிச்சது 100 ரூபா. ஆனா இந்த விலைக்கு இவ்வளவு பெரிய மீன் கிடைக்காது. அது ரெகுலரா சாப்பிடுறவங்களுக்குத் தெரியும். நாளைக்கு விலை குறைச்சலா வாங்கினு வந்தா விலை மலிவான பொரிச்ச மீன் கிடைக்கும்” என்றார்.

சுந்தரி அக்கா கடை
எக்ஸ்பிரஸ் அவன்யூவிலும், போனிக்ஸ் மால்களில் மட்டுமே தென்படும் ‘ஹைஃபை’ உடைகளுடன்  அந்த இடத்துக்குப் பொருந்தாமல் கையில் தட்டேந்தி சாப்பிட்ட பெண்  சுந்தரியின் அருகில் வருகிறார்.

“அம்மா..ஊர்ல எங்க பாட்டி வீட்டில சாப்பிட்ட மாதிரியே இருந்துச்சு” என்று கையைப் பிடித்து சொல்லிவிட்டு போனார்.

“டேய்..அந்த பிள்ளைட்ட 20 ரூபா கம்மியா வாங்குடா. என்னை ஃபீலாக்கிடுச்சு” என்று குறும்பாக சொல்லி இறாலை கரண்டியில் அள்ளி தோசைக்கல்லில் போடுகிறார் சுந்தரி அக்கா.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top