பாகுபலி-2 படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி -2 படத்திற்கான தமிழ் விநியோக உரிமையை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்நிலையில் ஸ்ரீ கிரின் புரொடக்சன் நிறுவனம், தங்களுக்கு தர வேண்டிய 1 கோடியே 18 லட்சம் ரூபாயை திரும்ப தரவில்லை எனவும், பணத்தை திரும்பத் தரும் வரை பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் எனவும் ஏ.சி.இ என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இதனால் குறிப்பிட்ட நாளில் தமிழகத்தில் பாகுபலி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஏ.சி.இ நிறுவனத்திற்கு தர வேண்டிய 1.18 கோடி ரூபாய் பணத்தை, ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் திரும்ப செலுத்தியது. ஒரு தரப்பினரும் சமாதானமானதை தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் எந்த தடையுமின்றி, வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழகத்தில் பாகுபலி 2 திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.