Tamil Cinema News | சினிமா செய்திகள்
விபத்தில் சிக்கி காருக்குள் தவித்த நடிகை.. செல்பி எடுத்த பொதுமக்கள்

முன்னணி நடிகருடன் ஜோடி போட்ட ஹீரோயின் ஒருவர் விபத்தில் சிக்கி ஒரு மணி நேரம் காருக்குள் போராடிக் கொண்டிருந்த போது, பொதுமக்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மேகா மேத்யூ. மோகன்லால் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள நீராளி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மேகா நடித்துள்ளார். இந்தநிலையில், எர்ணாகுளம் அருகே முளந்துருத்தி என்ற இடத்தில் மேகா சென்ற கார் விபத்துக்குள்ளானது.
கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் மிகவேகமாக வந்த கார் ஒன்று, அவர் பயணித்த கார் மீது இடித்தது. இதில் நிலைகுலைந்த கார் ஓட்டுநர், காரைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், சாலையில் வழுக்கிக் கொண்டே சென்ற மேகாவின் கார், ஒருகட்டத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
கவிழ்ந்துகிடந்த காருக்குள் ஏறக்குறைய 15 நிமிடங்களுக்கு மேல் சுயநினைவின்றி மேகா கிடந்திருக்கிறார். விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியும் அவரைக் காப்பாற்ற பொதுமக்களில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள். அதிலும், சிலர் விபத்தில் தலைகீழாகக் கவிழ்ந்துகிடந்த காருடன் செல்ஃபி எடுப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். சிறிது நேரத்துக்குப் பின்னர் புகைப்படக் கலைஞர் ஒருவர் மேகா மேத்யூவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.
காரில் ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருந்ததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேகா மேத்யூ, தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார். சுய நினைவு அடைந்து எழுந்த மேகா, இதுபோன்றதொரு கடினமான விபத்திலும் தான் உயிர் பிழைத்தது கடவுளின் கருணையால் மட்டுமே என்று அந்த கோர நொடிகளை நினைவு கூர்ந்துள்ளார்.
கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு நடைபெற இருந்த தனது சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கெடுக்க மேகா மேத்யூ காரில் சென்றிருக்கிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஆனந்தம் படம் மூலம் மல்லுவுட்டில் அறிமுகமான மேகா மேத்யூ, ஒரு மெக்ஸிகன் அப்பறத்தா, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
