சென்னை: சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் பேசியுள்ளார். அவர் கூறுவதை பார்த்தால் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.

ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. முதல்நாள் பேசிய அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என்றார். அரசியல்வாதிகளை முதலைகள் என்றும் கூறினார்.

நான் தமிழன்தான்

இந்த நிலையில் ரஜினி தமிழரா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்துவந்தனர். பாஜகவின் சுப்ரமணியசுவாமியும் கூட மராத்தியர் என்று ரஜினியை விமர்ச்சித்திருந்தார். இந்த நிலையில் இன்று பேசிய ரஜினி, வேறு மாநிலத்தில் இருந்து வந்த என்னை தமிழனாக மாற்றியது நீங்கள்தான் என பழியைத் தூக்கி ரசிகர்கள் மீது போட்டார்.

எதிர்ப்பே மூலதனம்

அரசியல் குறித்து நான் அன்மையில் பேசியது பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம் என்றார். அது நாம் வளர்வதற்கான உரம் என்று கூறியுள்ளார்.

போருக்கு தயாராகுங்க

அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. அனைவருக்கும் வேலை உள்ளது. ஊருக்கு சென்று தொடர்ந்து வேலையை பாருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று உணர்த்தியுள்ளார்.

கீழ்தரமான விமர்சனம்

சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்கிறார்கள் எனவும் என்று வருத்தம் தெரிவித்தார்.

நான் நினைப்பது தவறா?

தமிழக மக்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள். தமிழக மக்கள் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள். உங்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா? என்றும் கேட்டுள்ளார் ரஜினி.

எல்லோரும் இருந்தும் எதுவும் சரியில்லை

மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. இத்தனை பேரும் இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல் நிலவரம் சரியில்லை. ஜனநாயகம் சீர்குலைந்து கிடக்கிறது. அதற்கு மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும் என்றும் கூறியுள்ளார்.

வேலைகளை கவனியுங்கள்

ரஜினி பேசிய பேச்சைப் பார்த்தால், என்னவோ இவரை விட்டால் தமிழகத்தைக் காக்க ஆளை இல்லை என்பது போல இருக்கிறதே என்று தமிழ் மக்கள் காலையிலிருந்தே ஆச்சரியமாக யோசித்துக் கொண்டுள்ளனர். ரஜினியே சொன்னது போல போய் அவரவர் வேலையைப் பார்ப்போம். “போர்” வரும் போது பார்த்துக் கொள்ளலாம்!