ஆந்திரா மாநிலம், விஜயவாடா, யனமலகூடூரை சேர்ந்தவர் சீனிவாசராவ்(35). இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல்(30) என்பவருக்கும் பஸ்சில் வரும்போது பழக்கம் ஏற்பட்டது. சாமுவேல் எந்த வேலைக்கு செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில் சாமுவேலும், சீனிவாசராவும் பஸ்சில் வரும் பெண்களின் பஸ் பாஸ் மற்றும் பயணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கிப்ட் கூப்பன்களில் எழுதப்படும் செல்போன் நம்பரை எடுத்து அந்த நம்பர்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பி வந்துள்ளனர்.

கடந்த வாரம் பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடுள்ளது. இதை பார்த்த கண்டக்டர் சீனிவாசராவ் அந்த பயணியின் செல்போனில் உள்ள அவரது மகளின் நம்பரை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணின் நம்பருக்கு  அடிக்கடி போன் செய்து அவரது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரிப்பது போல் நடித்து, ஆபாசமாக பேசியும் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் சீனிவாசராவ்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சாமுவேல் பிடிபட்டார். மேலும் இதில் சீனிவாசராவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இருவரது செல்போனையும் ஆய்வு செய்ததில், 700க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இருவரும் வெவ்வேறு சிம்கார்டுகளை பயன்படுத்தி ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.