இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது அடுத்த படம் குறித்து வெளியாகி இருக்கும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Irumbu-Thirai

கோலிவுட்டில் பி.எஸ்.மித்ரன், இரும்புத்திரை படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஷால், சமந்தா, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், எவ்வளவு ஆபத்து நமக்கு இருக்கிறது என்பதை தோல் உரித்து காட்டுகிறது இப்படம். டிஜிட்டல் யுகத்தை பயன்படுத்தி பல்வேறு மாஃபியா கும்பல் மிகப்பெரிய மோசடிகளை கட்ட அவிழ்கிறது. ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நமது வங்கி விவரங்களை திருட முடியும். அந்தரங்க தரவுகளைத் திருட முடியும். இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உண்மையை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. இப்படம் மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

விஷாலின் திரை வாழ்வில் வெற்றி படமாக அமைந்தது இப்படம். முதல் படத்திலேயே பெரிய கதை பின்னணியை கையில் எடுத்திருக்கும் பி.எஸ். மித்ரனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, உதயநிதி ஸ்டாலின், விக்ரமையும் இவர் இயக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், பி.எஸ்.மித்ரனின் ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது. அப்பதிவில், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளிவந்து கொண்டு இருக்கிறேன். தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் போது உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.