Tamil Cinema News | சினிமா செய்திகள்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை படமாகிறது…
இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சினிமாத்துறை தற்போது வாழ்க்கை வரலாற்றை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில், வெளியான நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, நடிகை சவுந்தர்யா, கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படமாக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டி.ஆர் வாழ்க்கை படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிங்களத்தில் பாடுபட்ட தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உலகத் தமிழர்களால் தமிழ் தேசியத் தலைவராக மதிக்கப்படும் பிரபாகரன் தன் இறுதி மூச்சு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தார். 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. இதனை தொடர்ந்து, பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்காக 1991 முதல் சர்வதேச காவல் துறையால் தேடுப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. வாழ்வில் பல போராட்டங்களையும் இன்னல்களை சந்தித்த அவரது வாழ்க்கையை மக்களுக்கு எடுத்த செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். உனக்குள் நான், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரபாகரனாக நடிக்கவும், அவரது படையில் இருந்தவர்களாகவும் நடிக்க முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
