bonda mani

இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வண்ணத்திரை’ வார இதழில் நடிகர் போண்டா மணி அவர்களின் பேட்டி வெளிவந்தது. திரையுலகினர் மத்தியிலும், வாசகர்களிடமும் பெரும் வரவேற்பை, Yogi Devaraj அவர்கள் எடுத்த இந்த பேட்டி பெற்றிருக்கிறது.

பொதுவாக நம்பர் ஒன் நடிகைகளின் பேட்டியையே நான்கு அல்லது ஐந்து பக்கங்கள்தான் வெளிவரும். ஆனால், இந்த நேர்காணல் ஏழு பக்கங்கள் வரை நீண்டதற்கு ஒரு காரணம் உண்டு. பேட்டியில் இடம்பெறாத அந்த ரகசியம், இந்த ஸ்டேட்டஸின் இறுதியில்…

போண்டா மணி அவர்கள் ஈழத்தமிழர். 83 இனக்கலவரத்தின் போது சிங்கப்பூருக்கு தப்பி உயிர் பிழைத்தவர். ஆறு அண்ணன், ஆறு அக்கா, இரண்டு தம்பி, ஒரு தங்கை என்று பதினைந்து பேரோடு பிறந்தவர். கலவரத்தில் சகோதர சகோதரிகள் சிலரை இழந்தார். அவருடைய அம்மா உயிரோடு இருக்கிறாரா என்று இன்றுவரை மணிக்கு தெரியாது.

90களில் பிழைப்புக்காக தமிழகத்துக்கு வந்தபோது யதேச்சையாக ‘பவுனு பவுனுதான்’ படப்பிடிப்பை சேலம் அருகே பார்க்கிறார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவரை அப்படத்தில் மாப்பிள்ளையாக நடிக்க வைத்தார் பாக்யராஜ். சினிமா ருசி கண்டவர், கோடம்பாக்கத்துக்கு படையெடுத்தார். டீக்கடை மாஸ்டர், சப்ளையர், செக்யூரிட்டி, மார்க்கெட்டில் மூட்டை தூக்குதல் என்று பல்வேறு வேலைகள் செய்தார். அப்போது மார்க்கெட்டில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்துக் கொண்டிருந்த இன்னொரு பிரபலம், நம்ம இமான் அண்ணாச்சி.

சினிமா கம்பெனி ஒன்றில் ஆபிஸ் பாயாக இருந்தபோது, கவிஞர் மு.மேத்தாவின் அறிமுகம் கிடைத்து அவர் தயாரித்த ‘தென்றல் வரும் தெரு’ மூலம் மீண்டும் நடிகரானார்.

கோட்டீஸ்வரன் என்கிற இயற்பெயரை போண்டா மணி என்று மாற்றியவர் கவுண்டமணி. அப்போதெல்லாம் பசித்தால் ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்புவாராம்.

தனிக்கட்டையாக காலத்தின் போக்கில் அடித்துச் சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையை சீர்ப்படுத்தியவர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும். காஸ்ட்யூமர் சலபதியின் மகள் மாதவியை பெண் பார்த்து 40 வயதில் இவருக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் அவர்கள்தான்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், புதிய திரைப்படங்களை பார்ப்பதில் கடைசிக் காலத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், காமெடி சேனல்களில் (ஆதித்யா சேனலின் தீவிர ரசிகையாம்) வரும் காட்சிகளை ரசித்துப் பார்ப்பார்.

தேர்தல் நேரத்தில் கட்சி பிரமுகர்களிடம் குறிப்பிட்ட காமெடி காட்சிகளை சொல்லி, அதில் நடித்தவர்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார். அப்படி அதிமுகவுக்கு வந்தவர்கள்தான் சிங்கமுத்து, போண்டா மணி உள்ளிட்டோர்.

சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வரைப் பார்த்து தன்னுடைய பிரச்சினைகளை போண்டா மணி வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இலங்கைத் தமிழரான அவருக்கு இங்கே வசிப்பது தொடர்பான சில சிக்கல்களை உடனடியாக ஜெயலலிதா தீர்த்திருக்கிறார். மேலும், அரசு சார்பாக வீடு ஒன்று வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார். 300 படங்கள் நடித்திருந்தாலும் இன்றுவரை போண்டா மணிக்கு சொந்த வீடோ, வாகனமோ இல்லை.

போண்டா மணிக்கு வீடு ஒதுக்குவதற்கான ஃபைல் முதல்வரின் ஒப்புதலுக்காக போன நேரத்தில்தான், ஜெ. அப்போலோவில் அட்மிட் ஆனதாக சொல்கிறார்கள். அதன் பின்னர் அவர் தலைமைச் செயலகத்துக்கு வரவேயில்லை.ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது வேறு எவரையும் விட மிக அதிகமாக அழுதவர் போண்டா மணி. ஜெ.வின் மரணம், அவருக்கு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு அல்லவா? தன் வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றிவைக்க நினைத்தவரின் தலைமாட்டில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்த அவலம் அவரை வெடிக்க செய்து விட்டது.

மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவரின் மனம் சுக்குநூறாக உடைந்துப் போயிருக்கிறது. அவருக்கு ‘வண்ணத்திரை’யால் செய்ய முடிந்த நிவாரணம் இந்த பேட்டி. திரையுலகில் இருப்பவர்களுக்கே போண்டா மணியின் வேறு முகத்தை இந்த நேர்காணல் காட்டியிருக்கிறது.