மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இலவசமாக வீடுகளை வழங்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கடந்த மாதம் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் உட்பட 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் நிதி உதவிகளை அளித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கௌதம் காம்பீர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியின் போது பெற்ற ஆட்ட நாயகன் விருது பரிசையும் நிவாரணமாக வழங்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வீடுகள் வழங்கியுள்ளார்.

விவேக் ஓபராய் தனது கரம் கட்டுமான நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 25 பிளாட்டுகளை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். நடிகர் விவேக் ஓபராய் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.