கொதிக்கும் எண்ணெய்யினை என்மேல் ஊற்றினார்கள்! நெகிழ வைக்கும் திருநங்கையின் கதை
ஆணாக பிறந்து குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்ணாக மாறி அதை வெளியுலகிற்கு காட்ட முடியாமல் அவஸ்தைப்படும் திருநங்கைகள் பலர்.
அவர்களும் ஒரு உயிரே அவர்களுக்கு உணர்வுண்டு என்னும் புரிந்து கொள்ளதா இந்த சமூகம் இன்னும் அவர்களை ஒரு கேலி பொருளாகவே பார்க்கிறது.
திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துகூட தங்களுக்கான வாழ்க்கையினை வாழ முடிவதில்லை.
திறமைகள் இருந்தும் சுதந்திரமாக ஒரு வேலைக்கோ அல்லது தொழில் துவங்கவோ இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
உலகில் வாழும் திருநங்கைகளில் பலருக்கும் இந்த நிலையே. 10ல் ஒருவரே தங்கள் பெற்றோர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றனர். மற்றவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றில் வாழ்பவர் சீதா.
பெரும்பாலான திருநங்கைகள் தங்களின் கடந்த காலங்களை பற்றி கூறுவதில் ஆர்வம் கொள்வதில்லை.
சீதா,”இப்போ எனக்கு 40 வயசு. 12 வயசிலே எனக்குள் இருக்கிற பெண்மையினை உணர்ந்த போது சீனிவாசனாகவே பார்க்கப்பட்டேன். என் குடும்பமும் சமூகமும் என்னை புரிந்து கொள்ளவில்லை. அனைத்து துன்பங்களையும் கடந்தாயிற்று. இன்று எனக்கென குடும்பம் நான்கு உறவுகள் உள்ளது. தலைசாய்ந்து படுத்தவுடன் என்ன ஆயிற்று என கேட்க இரண்டு பிள்ளைகள் உள்ளனர்”, என பேசத் துவங்கினார்.
திருநங்கைகளுக்கோ அல்லது திருநம்பிகளுக்கோ தனது உடலில் ஒட்டியிருக்கும் அந்த அடையாளமே பெருந்துயரம். அந்த அடையாளத்தினை அகற்றுவதற்கு அவர்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்த அடையாளத்தை நீக்குவதற்காக போராடுகின்றனர்.
இந்த வேளையில் பெற்றோர்களாலும் நண்பர்களாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்களுக்கான சமூகத்தினை தேடி ஓடுகின்றனர்.
சீதாவும் தன்னை ஆணாக காட்டு அடையாளத்தை நீக்க பெருந்துயரங்களை அனுபவித்தே பெண்ணாக மாறி இருக்கிறார்.
”இப்போது அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்து அந்த அடையாளத்தினை நீக்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பிரத்யேக சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் இப்படி இல்லை”.
“சுடுகாட்டின் அருகே இதற்கெனவே ஒரு பழைய வீடு இருக்கும். அங்கு ஒரு குழியினை தயாராக வைத்துவிடுவர். அடையாளத்தை அகற்றும்போது இறந்துவிட்டால் அப்படியே புதைத்துவிடுவர். சடங்கு செய்யும் ஆயாம்மா, நான், என்னை தத்து எடுத்த அம்மா மூவர் மட்டுமே அங்கு இருந்தோம்,. இரவு 10மணிக்கு மாத்தம்மா படத்தை வைத்து பூஜை ஆரம்பித்தனர். 1 மணிக்கு பூஜை முடிந்து என் உறுப்பில் நூலை கட்டி கொஞ்சம் நடக்க சொன்னார்கள். பின் சவரகத்தியால் என் அடையாளத்தை அகற்றினார் ஆயாம்மா. அடையாளம் அகற்றப்பட்ட நிம்மதியில் என் வலியெல்லாம் காணாமல் போய்விட்டது. இரத்த பெருகி ஓடியது. வேதனையில் அசந்தால் ஆயாம்மா அறைவிட்டு எழுப்பிவிடுவர்.
அந்த இரவில் தூங்கிவிட்டால் இறந்துவிடுவார்களாம். எலுமிச்சை பழத்தையும் சுக்கையும் சாப்பிட சொன்னார்கள். இரத்தம் வரும் இடத்தில் எண்ணெய் கொதிக்கவைத்து தெளித்தார்கள். செத்துவிடாலாம் போல் வேதனை ஐந்து முறை தெளித்ததும் இரத்தம் நின்றது. முதல் நான்கு நாள் இப்படியே சென்றது. ஐந்தாம் நாளிலிருந்து ஐந்தடி தள்ளி நிற்கவைத்து கொதிக்கும் நீரை காயத்தில் ஊற்றினார்கள். நான் பரிபூரணமடைந்தது போல் இருந்தது. என் ஜனங்களோடு இப்போது நிம்மதியாய் இருக்கிறேன்.”, என்று முடித்து புன்னகைக்கிறார் சீதா. திருநங்கைகள் கட்டுகோப்புடனும் கண்ணியமாக வாழ நினைப்பவர்கள். தங்களில் வயதில் மூத்தவரை பார்க்கும்போது மற்றவர்கள் பாம்படத்தி(வணக்கம் அம்மா) என்று வணங்குவர். அவர் ஜீத்தரோ(நல்லா இரு) என வாழ்த்துவர். மூத்தவர் இருக்கும்போது மற்றவர்கள் பேசுவதோ அமர்வதோ கிடையாது. இவர்கள் தெய்வமாக வணங்கும் குஜராத் அகமதாபாத்தில் உள்ள போத்ராஜ் மாத்தம்மா-வினை வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வணங்கிவதை புண்ணியமாக கருதுகின்றனர்.
அதே போல் கூத்தாண்டவர் கோவிலுக்கு செல்வதையும் வாழ்வியல் கடமையாக கருதுகின்றனர்.
