தமிழகம் என்றும் சில அவலங்களுக்கு விதிவிலக்காக இருக்கும். ஏனென்றால் இங்கு எதையும் சிந்தித்து நோக்கும் மக்கள் பெருவாரியாக உள்ளனர். ஆனால் இங்கும் புகுந்துவிட்டது அந்த வக்கிரம்.

ஆம் ப்ளூ வேல் கேம். இதனை பற்றிய சினிமா பேட்டையின் முந்தைய பதிவை இங்கு காண்க. பதின் வயதினரை குறிவைத்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இறுதியாக அவர்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் கொடூர விளையாட்டுதான் இந்த ப்ளூ வேல் கேம்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த இந்த கேம் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வருகிறது. மும்பை, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இந்த விளையாட்டினால் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது இந்த விளையாட்டின் வக்கிரம். ஆம் மதுரை விளாச்சேரி மொட்டமலையை சேர்ந்த விக்கி என்னும் 19 வயது இளைஞன் நேற்று மாலை 6:30 மணிக்கு வீட்டின் உள்ளே தனது தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார் விக்கியின் இடது கையில் ப்ளூ வேல் என்று எழுதியிருப்பதை கண்டறிந்தனர். விக்கி தொடர்ந்து ப்ளூ வேல் விளையாட்டை விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது.

சமீபத்தில் புளுவேல் விளையாட்டில் மூளையாக செயல்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கபரோவ்ஸ்க் நகரில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த சிறுமி, முதலில் இந்த விளையாட்டை விளையாடியுள்ளார். ஆனால், இறுதி கட்டத்தை, விளையாடாமல், குழு தலைவராக மாறி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளார். புளுவேல் விளையாட்டில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு தொடர் உத்தரவுகளை பிறப்பித்து வந்த சிறுமி, இந்த குழுக்களில் சேர்பவர்களை கொடுக்கப்பட்ட உத்தரவுகளை செய்யாவிட்டால், அவரையோ அல்லது அவரது உறவினர்களையோ கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ‘கேம்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் தான் உயிர் பலியை தடுக்க முடியும். இந்த ‘கேம்’மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்கள் தளம் மூலம் எங்களால் முடிந்த விழிப்புணர்வை பகிர்கிறோம். இதனை படிக்கும் நீங்களும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.