புளுவேலை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஆபத்தாக “பிளாக்கா” என்ற போதைப்பொருள் வந்துள்ளது. உலகம் முழுவதும் புளுவேல் விளையாட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து 50 நாள் விளையாடும் நபர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வது போல் இந்த விளையாட்டின் முடிவு அமைந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவிலும் பலர் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்திலும் சிலர் தற்கொலை செய்ததால் பெற்றோர் மனதில் பீதி ஏற்பட்டது.

இதையடுத்து புளுவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. புளுவேல் பீதி அடங்குவதற்குள் அடுத்ததாக ‘பிளாக்கா’ என்ற புதிய மிரட்டல் வந்துள்ளது. இது விளையாட்டு அல்ல, போதைப்பொருள்.

வழக்கம் போல் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலேயே இந்த போதை பொருள் விற்பனை தொடங்கியிருக்கிறது. வெறும் போதைப் பொருள்தானே என்று அலட்சியமாக விட முடியாது. இதை பயன்படுத்தினால் அடுத்தது தற்கொலை தான்.

அந்த அளவுக்கு இவர்கள் அசாதாரண மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். பிளாக்கா போதை பொருளை உட்கொள்ளும் நபரின் உடல் வெப்பநிலை 105 டிகிரிக்கு மேல் சுமார் 3 முதல் 5 மணி நேரம் இருக்கிறது.

இதனால் தன்னை ஒரு சூப்பர் மேன் போல் நினைத்துக்கொள்ளும் அவர்கள் மாடியில் இருந்து குதிப்பது, மரத்தில் இருந்து தாவுவது, ஜன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியே வருவது, பால்கனியில் இருந்து கீழே குதிப்பது உள்ளிட்ட அசாதாரண நிலைக்கு சென்று உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 20 பேர் தற்கொலை செய்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பிளாக்கா என்ற போதைப்பொருள் உட்கொள்வதாக புகார் வந்துள்ளன. ₹300 முதல் ₹500க்குள் கிடைப்பதால் அனைவரும் எளிதாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இந்த போதை பொருள் இந்தியாவிலும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. எனவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக்கா போதை பொருளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பிளாக்கா என்றால் என்ன?

ஆல்பா பிவிபி என்ற வேதிப்பொருள் கலவைதான் பிளாக்கா என்ற போதைப்பொருள். அதாவது பாறை உப்பு(சரளைக்கல்) போன்றது. 2011 முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல் மூலமும், ஊசி மூலமும் இதை உட்கொள்கிறார்கள். அடுத்த 3 முதல் 5 மணி நேரத்திற்கு உடல்வெப்பம் அதிகரித்து மூளை கட்டுப்பாட்டை இழந்து அசாதரணமாக சிந்திக்கிறது.

ெஹராயின், கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருளை விடவும் மிகவும் மோசமானது பிளாக்கா தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான உஷார்நிலை, இயல்புநிலையை விட்டு அதிகப்படியாக செயல்படுதல், அதிகமாக கோபம் அடைதல், சித்தபிரமை, குழப்பம், மாய உலகில் இருப்பது போன்று இருந்தால் அவர்கள் பிளாக்கா போதை உபயோகப்படுத்தி இருப்பதாக சந்தேகம் அடையலாம்.

நிர்வாண ஓட்டம்: மரங்களுடன் உறவு

பிளாக்காவை உட்கொண்டவர்கள் தங்களை அதீத சக்தி படைத்தவர்களாக கற்பனை செய்து கொண்டு ஆடைகளை களைந்து நிர்வாணமாக வீதியில் ஓடுகிறார்கள். வாகனங்களின் குறுக்கே பாய்கிறார்கள்.

அனைத்தையும் விட பொதுஇடங்களில் ஒழுக்கக்கேடாக நடப்பதாகவும், மரங்களுடன் கூட உறவு வைப்பது போல் நடந்து கொள்வதையும் அமெரிக்காவில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.