சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் ரேஸ் காரணமாக அதிவேகமாக வந்த பைக் மோதி பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

வார இறுதிகளில் சென்னையின் கடற்கரை சாலை மற்றும் மகாபலிபுரம் சாலையில் பைக் ரேஸ் செய்வதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். போலீசார் பலமுறை எச்சரித்தும் இளைஞர்கள் பைக்ரேஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் என்பது வார இறுதிகளில் அதிக அளவில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சாலையின் ஓரமாக சென்றாலும் கண்மூடித்தனமாக பைக் ஓட்டி வரும் இளைஞர்களால் பலர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

பெண் பலி

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 6 இளைஞர்கள் பைக்கில் போட்டி போட்டு ரேஸ் சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்க இரண்டு பெண்கள் மீது பைக் பலமாக மோதியுள்ளது.

மற்றொரு பெண்ணுக்கு கால்முறிவு

இதில் மீரா என்ற 55 மதிக்கத்தக்க பெண் தொழிலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பெண் கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர்கள் கைது

இந்த பைக் ரேஸ் தொடர்பாக அதிவேகமாக பைக் ஓட்டி வந்த பிரபு மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் அடையாறு போக்குவரத்துத் துறையினர் விசாரணை நடத்தினர்.

பொதுமக்கள் கோரிக்கை

போலீசார் எச்சரிக்கைகளையும் மீறி இளைஞர்கள் பைக் ரேஸ்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக மெரினா கடற்கரை சாலை பகுதிவாசிகள். எனவே கடுமையான சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.