Politics | அரசியல்
பிகிலாக இருந்தாலும் சரி.. திகிலாக இருந்தாலும் சரி.. ஒரே போடாக போட்ட ஜெயக்குமார்.. இதுதான் நிபந்தனை
சென்னை: சிறப்புக்காட்சி என்ற பெயரில் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதற்காகவே அதற்கு அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வெளியடப்படும் படங்களுக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடஅரசு அனுமதி அளிக்கும். அந்த காட்சிக்காக இரவில் இருந்தேரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள். இதன் மூலம் 5 அல்லது 6 காட்சிகள் ஒரே நாளில் திரையிடப்படும். ஆனால் இப்படி வெளியிடப்படும் சிறப்பு காட்சிகளின் போது திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வரும்.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க பிகில் மற்றும் கைதி படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி மறுத்துள்ளது. இதை பழிவாங்கும் நடவடிக்கை என சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இதை அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில, “சிறப்புக்காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதால்தான் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முறையான கட்டணம் வசூலித்தால் சிறப்புக்காட்சி அனுமதியை அரசு பரிசீலனை செய்யும் பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி சட்டப்படி செயல்பட வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்தி சிரமப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்துள்ளது” என்றார்.
