‘பிக் பாஸ்’ பார்வையாளர்கள் 3 கோடியைக் கடந்து விட்டதாக விஜய் தொலைக்காட்சி தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25-ம் தேதி முதல், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை உடனுக்குடன் கலாய்த்து மீம்ஸ்கள் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள 15 பேரில், அனுயா மட்டும் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் 3கோடியே 60 லட்சம் ஆனது. நன்றி மக்களே” என்று தெரிவித்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளும், சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் கமல் கலந்து கொண்டு வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பேசும் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.