Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்ச்சை நடிகையுடன் தொடங்கிய பிக்பாஸ் – 2 படப்பிடிப்பு. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
வட இந்திய மீடியாக்களில் மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ கடந்தாண்டு தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு டிவி சேனல்களில் அறிமுகமானது.
எண்டோல்மான் ஷைன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த ரியாலிட்டி ஷோ தமிழில் ஸ்டார் விஜய் சேனலிலும், தெலுங்கில் ஸ்டார் மா சேனலிலும் ஒளிபரப்பாகின. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பேராதரவுடன் கோடிகளை வருமானமாக ஈட்டின. இந்தநிலையில், தமிழ், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனெவே வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழில் இரண்டாவது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்காக இரண்டு புரோமோக்களும் வெளியாகிவிட்டன.
தெலுங்கில் ஏற்கனெவே ஒப்புக்கொண்ட புராஜக்டுகளில் ஜூனியர் என்.டி.ஆர். பிஸியாக இருக்கவே, பிக்பாஸ் சீசன் – 2வை `நேச்சுரல் ஸ்டார்’ நானி தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தாவுடன் ஹீரோவாக நடித்தவர்தான் நானி. இவர் தெலுங்கில் முன்னணி நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒளிபரப்பு வரும் 10-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்து ஸ்டார் மா சேனல் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை பிக்பாஸ் – 2 ஷூட்டிங்கில் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன.
இந்தநிலையில், நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் – 2வில் இடம்பெறப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தெலுங்கு ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பிக்பாஸ் – 2 நிகழ்ச்சியை அறிவிக்கும் முன்னரே ஸ்டார் மா டிவி சேனல் ஒரு போட்டியாளரை முடிவு செய்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
டோலிவுட்டில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறி புகார் கிளப்பிய ஸ்ரீரெட்டி என்ற நடிகைதான் அது என நெட்டிசன்களும் ஊடக செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கு பட உலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் தன்னையும் மோசம் செய்து விட்டனர் என்றும் ஸ்ரீரெட்டி கூறிய பரபரப்பு புகார் தேசிய அளவில் புயலைக் கிளப்பியது.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி, தெலங்கானா அரசிடம் விளக்கமும் கேட்டுள்ளது. அதேபோல், தெலுங்கு நடிகர் சங்கமும் இந்த விவகாரம் குறித்து தனியாகக் குழு அமைத்து விசாரிக்கிறது. புகார் குறித்து பேசிய நடிகை ஸ்ரீரெட்டி, “தெலுங்கு இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்தான். அவர்களின் தொல்லைகளை நடிகைகள் துணிச்சலாக வெளியே சொல்ல தயங்குகிறார்கள். அப்படி சொன்னால் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று அச்சப்படுகின்றனர். தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்றும் அஞ்சுகிறார்கள். சம்பளத்தில் கூட பாரபட்சம் உள்ளது. கதாநாயகனுக்கு ரூ.10 கோடி கொடுக்கிறார்கள். கதாநாயகிக்கு ரூ.1 கோடி கூட கொடுப்பது இல்லை’’ என பரபரப்பாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் பிக்பாஸ் சீசன் 2 வின் போட்டியாளராக இருப்பது நிச்சயம் டி.ஆர்.பியை எகிறச் செய்யும் என டிவி சேனல் தரப்பு நினைக்கிறதாம். அதேபோல், ஸ்ரீரெட்டியுடன் வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் கிளாமர் நடிகை சார்மி மற்றும் நடிகர் ராஜ் தருண் ஆகியோரும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
