Tamil Cinema News | சினிமா செய்திகள்
களைகட்டும் பிக்பாஸ் சீசன் 2.. அரசியல், நையாண்டி, காமெடிக்கு கேரண்டி

வெள்ளித்திரையில் முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. இந்தியில் 10 சீசன்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மலையாளத்தில் இந்த ஆண்டு முதல் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மல்லுவுட்டின் முன்னணி நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்க இருக்கிறது.
தமிழில் முதன்முறையாக விஜய் டிவியில் அந்த ஷோ கடந்த ஆண்டு ஒளிபரப்பானது. 15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில், எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்ற கான்சப்டுடன் வடிவமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 100 நாட்கள், 60 கேமிராக்கள், ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் என்பதுதான் நிகழ்ச்சியின் மையக்கரு.
கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, கஞ்சா கருப்பு, சக்தி, காயத்ரி ரகுராம், ஹாரத்தி என பிரபலங்கள் வரிசைகட்டினாலும், பிக்பாஸ் முதல் சீசன் டைட்டிலை ஆரவ் தட்டிச் சென்றார். முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கான வேலைகளில் சேனல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் சீசன் -2 நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது. இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாஷிகா ஆனந்த் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய, அவரைத் தொடர்ந்து 15 போட்டியாளர்கள் நுழைந்தனர். அவர்களில், சினிமா வில்லன் பொன்னம்பலம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் டேனியல், மூடர் கூடம் மூலம் பிரபலமான சென்ட்ராயன், மங்காத்தாவில் நடித்த மஹத், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா, நடிகை ஜனனி ஐயர், வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்தியநாதன், நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசன், நடிகை மும்தாஜ், தொகுப்பாளனி மமதி சாரி, ஆர்.ஜே.வைஷ்ணவி, பாடகி ரம்யா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் புகழ் ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ் பட நாயகி ரித்விகா ஆகியோர் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் முதல் சீசனில் கலக்கிய ஓவியா கெஸ்டாக ஒருவாரம் தங்கியிருப்பார் என தெரிகிறது.
கடந்த சீசனை விட இந்த சீசன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த சீசனில் பெற்ற அனுபவங்களை வைத்து நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் தவறு செய்பவர்களைத் தனிமைப்படுத்தும் வகையில் புதிதாக ஜெயில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பேன், கழிப்பறை வசதிகள் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் அந்த ஜெயில் போட்டியாளர்களை பயமுறுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது ஜெயில் குறித்த விளக்கம், தனது கட்சி என அரசியல் கருத்துகளோடு அதிரவைத்தார் கமல். மேலும், சென்ட்ராயன், டேனியல் தாடி பாலாஜி மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதால் இந்த சீசனில் நைய்யாண்டிக்கும், ரகளைக்கும் காமெடிக்கும் பஞ்சமிருக்காது என நம்பலாம்.
அதுவும் முதல் நாளே சென்ட்ராயனை மும்தாஜ் முறைத்துக் கொண்டதும், உங்களலாம் பாத்தா பாவமா இருக்கு என ஓவியாவின் ட்ரேட் மார்க் கமெண்டும் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொடங்கி வைத்திருக்கிறது. அடுத்த 99 நாட்களுக்கு பிக்பாஸ் சீசன் – 2 பற்றிய பேச்சுத்தான் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்க கலக்குங்க பிக்பாஸ்!
