Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது.

பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பிரதர்

முதலில் ‘பிக் பாஸ்’ வரலாறை பார்ப்போம். எண்டமால், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் தயாரிப்பு நிறுவனம். இது பல்வேறு நாடுகளின் டிவி சேனல்களுக்காக ரியாலிட்டி ஷோ உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் டி மால் என்பவர் டிசைன் செய்த ரியாலிட்டி ஷோ பார்மெட்தான் ‘பிக் பிரதர்’.

கான்செப்ட்

குறிப்பிட்ட போட்டியாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள், எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் அந்த வீட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, செல்போன், இணையம், கடிகாரம், பேனா, பென்சில், பேப்பர்… எந்தத் தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. போட்டியாளர்கள் வெளிஉலகத் தொடர்பில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.

அவர்களுக்குள் போட்டிகள், கேம்கள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் கான்செப்ட்.

பிக் பாஸ்

இந்த ‘பிக் பிரதர்’ 2006ல் ‘பிக் பாஸ்’ என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. ‘எண்டமால்’ நிறுவனமே பிக்பாஸையும் தயாரித்தது. அப்போது பிக் பாஸுக்காக ஒரிஜினல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு சின்ன மாற்றம் செய்தார்கள். ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் சாமானியர்கள். ஆனால் பிக் பாஸில் போட்டியாளர்கள் அனைவரும் பிரபலங்கள். ‘பிக்பாஸ்’ இதுவரை இந்தியாவில் 10 சீசன்களை கண்டுள்ளது. இவற்றை தொகுத்து வழங்கிய அனைவரும் சினிமா பிரபலங்களே. அதிகபட்சமாக சல்மான்கான் ஆறு சீசன்களையும், அமிதாப், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத், அஷ்ரத் வர்ஷி ஆகியோர் தலா ஒரு சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளனர்.

விதிகள்:

கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் சகாக்களுடன் இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் பேசக்கூடாது. கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. சில நேரங்களில் விதிகளை மீறுதல், வேறு ஏதாவது முக்கியமான பிரச்னை வரும்போது, அதற்குக் காரணமான அந்த நபர், நேயர்களின் வாக்கு இல்லாமலேயே வெளியேற்றப்படுவார். இதுதான் இந்தி பிக்பாஸ் விதிகள்.

‘பிக் பாஸ்’ பெரிய பிரச்னை பாஸ்:

சன்னி லியோன், வீணா மாலிக் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் கலந்துகொண்டது, முதல் சீசனில் நுழைந்த ராக்கி சாவந்த் பண்ணிய அதகளங்கள், கஜோலின் தங்கை தனிஷாவும் நடிகர் அர்மான் கோஹ்லியும் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானது, ‘அர்மான் கோலி என்னை துடைப்பத்தால் தாக்கினார்’ என்ற நடிகை சோபியா ஹயாத்தின் புகாரின் பேரில் நடிகர் அர்மானை போலீசார் கைது செய்தது, ‘பிக் பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து சல்மான் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்’ என்ற சாமியார் ஓம் பேட்டியளித்தது… என்று பிக் பாஸில் சர்ச்சைகள் மிகச் சாதாரணம். ஆனால் பொழுதுபோக்குக்கு கியாரண்டி.

தமிழ் பிக்பாஸ்

இந்த சூழலில் கடந்த மூன்றாண்டுகளாக பிக் பாஸை தமிழ் பேச வைக்க எண்டமால் நிறுவனம் முயற்சி செய்து வந்தது. ஆனால் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்து வந்துள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்புவது விஜய் டிவி, தொகுப்பாளர் கமல்ஹாசன் என்பது மட்டுமே இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலையில் ஒளிபரப்பு என்பது அவர்களின் திட்டம். ‘தமிழ் பிக் பாஸ்’ உடன் தொடர்பில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

‘‘10 முதல் 12 போட்டியாளர்கள். இவர்கள் அனைவரும் பிரபலங்களே. ஷூட்டிங், பார்ட்டி என்று எந்நேரமும் மேக்கப் கலையாத முகத்துடன் பார்த்து பழக்கப்பட்ட இவர்களை ஒரே வீட்டில் இயல்பான முகம், குணத்துடன் 100 நாட்கள் பார்க்கப்போகிறோம். மகிழ்ச்சி, துக்கம், இக்கட்டு… வெவ்வேறு சூழல்களை வெளி உலகத் தொடர்பு இன்றி அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணப்போகிறோம். போட்டியாளர்களுக்கு 15 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு நடக்கிறது.

வீடு

பிக் பாஸுக்கான பிரத்யேக வீடு புனேவில் உள்ள லோனோவாலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட அந்த சொகுசு வீட்டில் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் 60 முதல் 80 கேமராக்கள் வரை பொருத்தப்படும். 24 மணிநேரமும் அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

‘இந்தி பிக் பாஸில் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே அறையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் வெவ்வேறு அறைகள். இப்படி நம் கலாசாரத்தை மனதில் வைத்து சில மாற்றங்களை செய்துள்ளோம். மற்றபடி அதே கான்செப்ட்தான். 100 நாள், 100 எபிசோட். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி மறுநாள் மதிய நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளர் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே வருவார். அப்போது போட்டிகள், கலந்துரையாடல்கள் இருக்கும். நிறைய சவால்களை சந்தித்து சாதனை படைப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும்.

கமல்

இந்த நிகழ்ச்சியை நடத்த ஆர்வத்துடன் காத்திருக்கும் கமல் சார், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். கமல் சார் சமூக சீர்திருத்தம் குறித்து சிந்திப்பவர், முற்போக்கு கருத்துக்களை கொண்டவர், அவருக்கென அரசியல் பார்வை உண்டு. இலக்கியவாதி. இப்படிப்பட்ட பன்முகம் கொண்டவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது இதன் தரம் வேறு தளத்தில் இருக்கும் என்பது நிச்சயம்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top