நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறியது: பாவனா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை. அசம்பாவித சம்பவத்துக்கு பிறகு பாவனாவிடம் நான் பேசினேன். தான் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்றும் என்னிடம் கூறினார். ஆனால் பலாத்காரம் செய்யப்பட்டதாக எப்படி தகவல் வருகிறது என்று தெரியவில்லை.

மாஜி கார் டிரைவர் மற்றும் அவனது கூட்டாளிகள் பாவனாவை கடத்தி சென்றுள்ளனர். பிறகு பாவனாவின் ஆடைகளை களைந்து படங்கள் எடுத்திருக்கின்றனர். அதை வைத்து அவரை பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. பாவனாவின் கார் டிரைவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது கொடிய குற்றம். இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபரே இதுபோன்று நடந்துகொண்டால் நாட்டில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.

தான் யார் என்பது நடிகைக்கு நன்கு அடையாளம் தெரிந்திருந்தும் கூட எந்த துணிச்சலில் இப்படியொரு காரியத்தில் அந்த நபர் ஈடுபட்டார். பாவனாவுக்கும் பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. பாவனாவுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வருங்கால கணவரின் முடிவை மாற்றவில்லை. அவர் பாவனாவுக்கு துணையாக நிற்கிறார். திட்டமிட்டபடி அவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடக்கும். இவ்வாறு பிரியதர்ஷன் கூறினார்.