நடிகை பாவனா வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி சுனில்குமார் தமிழகத்துக்கு தப்பியிருக்கலாம் என, கேரள போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளரின் மகன் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பாவனா, கடந்த 17-ம் தேதி கொச்சி அருகே கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து இரவில் காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் காரை மறித்து ஏறிய 3 பேர், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பாவனாவின் புகாரின்பேரில், கார் ஓட்டுநர் மார்ட்டின் முதலில் கைது செய்யப்பட்டார். வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கார் ஓட்டுநராக பாவனாவிடம் வேலை பார்த்த பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில்குமார் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவருடன் மணிகண்டன், விஜீஸ் ஆகியோரையும் போலீஸார் தேடி வந்தனர். இவர்களில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார்.

முன்ஜாமீன் ஒத்திவைப்பு:

பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார், விஜீஸ் ஆகியோர் சார்பில், முன் ஜாமீன் கோரி, எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை வரும் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தின் உச்சகட்ட திருப்பமாக, வயநாட்டில், பாஜக கேரள மாநில பொதுச் செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன், பினீஷ் கொடியேறிக்கு, பாவனா கடத்தல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளது. திரைத்துறை மாஃபியாக்களுக்கு அவரே அடைக்கலம் கொடுக்கிறார். இது தொடர்பாக, அவரிடம் விசாரிக்க வேண்டும். இவர் மலையாளப் படங்களிலும் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளார்” என்றார்.

மற்றொரு திருப்பம்:

நடிகர் திலீப், அண்மையில் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் குறித்து, இத்திருமணத்துக்கு முன்னதாகவே, திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம், பாவனா எச்சரித்ததாகவும், அதனால், திலீப் பாவனா இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனது பட வாய்ப்புகளைத் திலீப் தடுத்து நிறுத்துவதாக, பாவனாவே ஒரு பேட்டியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தற்போதைய கொச்சி சம்பவத்துடன், இந்த விவகாரம் முடிச்சு போடப்பட்டு, கேரளாவில் பரபரப்பானது.

ஆனால், பாவனாவுக்கு ஆதரவாக கேரள திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திலீப், ‘பாவனாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இப்பிரச்சினையில் மலையாள திரையுலகினர் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பேன்’ என அறிவித்தார்.

வலைதள குளறுபடி:

இதனிடையே, பாவனாவை கடத்திய முக்கிய குற்றவாளி சுனில்குமார் என கூறி, சமூக வலைதளங்களில் ஒரு படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது, திலீப் ரசிகர் மன்றத் தலைவராக உள்ள ரியஸ்கான் என்பவரது புகைப்படம். உடனே அவர், நிருபர்களைச் சந்தித்து, “ஆலப்புழாவில் திலீப் ரசிகர் மன்ற கூட்டத்தில் எடுத்த என் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, சுனில்குமார் என வதந்தி பரப்பி வருகின்றனர். இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் காட்டம்:

கேரள முன்னாள் அமைச்சரும், பத்தனாபுரம் எம்எல்ஏவுமான கணேஷ்குமார் நடிகரும் கூட. இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேரள சினிமா துறையில் ரவுடிகள் புகுந்துள்ளனர். இதேபோல் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. கொச்சியில் இருந்து இப்பின்னணியில் வரும் படங்களே இதற்கு சாட்சி’ என கூறியுள்ளார்.

முதல்வர் ஆறுதல்:

கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகி யோர், பாவனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலனும், ‘கடவுளாகவே இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்’ என கூறியிருந்தார்.