சமீபத்தில் வெளியான படங்களில் நல்ல படம் என்ற பாராட்டைப் பெற்றது மட்டுமல்ல, வணிகரீதியில் வெற்றியையும் பெற்ற படம் – குரங்கு பொம்மை.
கடந்த வாரம் சுமார் 200 தியேட்டர்களில் வெளியான குரங்கு பொம்மை, அடுத்த நாளே 50 தியேட்டர்களில் கூடுதலாக திரையிடப்பட்டது.bharathiraja

விவேகம் படத்தை திரையிட்ட பல தியேட்டர்களும், புரியாத புதிர் படத்தை திரையிட்ட தியேட்டர்களும் அவற்றை தூக்கிவிட்டு குரங்கு பொம்மை படத்தை திரையிட முன் வந்ததே இந்த எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம்.
அப்படியானால். குரங்கு பொம்மையின் வசூலை தியேட்டர்கள் அள்ளும் என்றுதானே தலைப்பு வைத்திருக்க வேண்டும்?

அதற்கு நேர்மாறாக, குரங்கு பொம்மையின் வசூலை தியேட்டர்கள் கொல்லும் என்று தலைப்பு வைத்தது ஏன்?
இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.
விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் வெளியான குரங்கு பொம்மை படத்துக்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் குரங்கு பொம்மை படத்தை தயாரித்தவர்களுக்கு மட்டுமல்ல, படத்தை வாங்கியவர்களுக்கும் நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது.இன்னும் ஒரு வாரம் ஓடினால் மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்ற நிலையில், அதற்கு தியேட்டர்காரர்கள் அவகாசம் கொடுக்கவில்லை என்பதுதான் அநியாயம்.

இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்காக பல தியேட்டர்களில் இருந்து குரங்கு பொம்மை படத்தை தூக்கிவிட முடிவு செய்துள்ளனர்.இந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, குரங்கு பொம்மை படத்தின் வெற்றிக்கு வித்திட்ட ஊடகங்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை நடத்தினர் படக்குழுவினர்.
அதில் கலந்து கொண்ட பாரதிராஜா, தியேட்டர்கள் செய்யும் இந்த அக்கிரமங்களை தட்டிக் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வாடகையை வாங்கிக் கொண்டு ஓடாத படங்களை எல்லாம் 100 நாட்கள் ஓட்டுகிற தியேட்டர்கள், குரங்கு பொம்மை போன்ற நல்ல படங்களை ஓட வைக்க உதவினால் என்ன?