பாக்யராஜ் நிகழ்த்திய அறிய சாதனை.. வசந்த காலமாக அமைந்த அந்த ஆண்டு

பாக்யராஜ் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார். இந்நிலையில் பல ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் பாக்யராஜ் ஒரு வருடத்திலேயே நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நான்கு படங்களிலும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்கமும் பாக்யராஜ் தான். அவ்வாறு பாக்யராஜுக்கு வசந்த காலமாக அமைந்த ஆண்டு தான் 1981. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி மாதம் வெளியானது மௌனகீதங்கள் படம். இப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியான படம்தான் இன்று போய் நாளை வா. இப்படத்தில் எதிர் வீட்டில் புதிதாக குடிவந்திருக்கும் ராதிகாவை, பாக்யராஜ் உடன் சேர்த்து மூன்று ஆண்கள் காதலிக்கின்றனர். இப்படம் முழுக்க நகைச்சுவை காட்சிதான்.

இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. மேலும் இதே படம் ரீமேக் செய்யப்பட்டு சந்தானம் நடிப்பில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் 1981 இல் பாக்யராஜின் விடியும் வரை காத்திரு படம் வெளியானது. இப்படத்தில் பாக்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பாக்யராஜுக்கு வெற்றியை தந்தது. கடைசியாக இதே ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அந்த 7 நாட்கள். இப்படத்தில் பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்திருந்தார். மேலும் அம்பிகா, ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்து வெள்ளிவிழா கண்டது. ஒரு வருடத்திற்கு உள்ளேயே பாக்யராஜ் திரைக்கதை, இயக்கம், நடிப்பில் வெளியான நான்கு படங்களும் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை. மேலும் தற்போது வரை இதுபோன்ற சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்