Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏனென்றால் அவர் தோனி.. ஐபிஎல்-லைக் கலக்கும் சிங்கம்!
கிரிக்கெட் உலகின் தனக்கென தனி பாணியையே உருவாக்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி எல்லா உச்சத்தையும் அடைந்துவிட்டது.
டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை, ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் வெற்றி, சர்வதேச டெஸ்ட் தரவரிசைகளில் முதலிடம் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். தனிநபர் சாதனைகளைத் தாண்டி ஒரு அணியாக சாதிக்க வேண்டும் என்பதே தோனியின் ஸ்டைல். சக வீரர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை, அதுவே வெற்றியின் மந்திரக் கோல். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொரு வீரரும் உழைப்பது கண்கூடு.
உலகின் நீளமான பிளாட்பாரத்தைக் கொண்ட கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் செக்கராக வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, இன்று கிரிக்கெட் உலகின் மிஸ்டர் கூல் கேப்டன். தோனியை உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் இவ்வளவு தூரம் கொண்டாட என்ன காரணம்?. வெரி சிம்பிள். அத்தனை சாதனைகளையும், சோதனைகளையும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனோடு கடந்துசெல்லும் அந்த எளிமையான தன்மை.
பாமர ரசிகனைக் கவர அதுபோதும். ஆனால், அதையும் தாண்டி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பலரும் அவரைக் கொண்டாட வேறொரு காரணம் இருக்கிறது. அது, தோனிக்கே உரித்தான திட்டமிடல். இன்றைய சூழலில் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஸ்ரேடஜிஸ்ட் நம்ம தல தோனிதான். இதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. தோல்வியின் விளிம்பில் கூட நிதானமாகத் திட்டமிடும் தோனி, கடைசிவரை வெற்றிக்கான முனைப்பையும், முயற்சியையும் கைவிடுவதில்லை.
அதேநேரம், எந்தவித உணர்ச்சிகளையும் களத்தில் அவர் வெளிப்படுத்தி விட மாட்டார். கடைசி வரை கூலாகவே காட்சியளிக்கும் தோனியின் மனநிலை எப்போதும் புயல் நேரத்தின் கடலலையைப் போன்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான அந்த போட்டியில் சிஎஸ்கே ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் வெற்றிபெற்றது.
கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்த போது, டக்கவுட்டில் தோனி அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்தார். ஒருவிதமான டென்ஷன் அவரது முகத்தில் தெரிந்தது. தோனியை அந்த மனநிலையில் பார்ப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணி பங்கேற்கும் முதல் போட்டி என்பதால், தோனிக்கு அவ்வளவு பிரஷர்.
போட்டிக்குப் பின்னர் பேசிய தோனியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு, `எனக்கும் எல்லா உணர்ச்சிகளும் உண்டு. ஆனால், அதை மைதானத்தில் காட்டினால், வர்ணனையாளர்களின் இலக்காக நேரிடும். அதை வெளிப்படுத்த டக் அவுட் உள்ளிட்ட வேறு இடங்கள் இருக்கின்றன’ என்று தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன் பதிலளித்தார். அதுதான் தோனி.
அண்மைகாலமாக தோனியின் பேட்டிங் ஆவரேஜ் கவலையளிப்பதாக இருந்தது. பழைய வேகம் அவரிடம் இல்லை. அவரின் பார்ம் குறித்து இப்படி பல கேள்விகளை எழுப்பி, விமர்சன கணைகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. கேப்டனாக எந்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளாத தோனி, பேட்ஸ்மேனாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தார். ஆனால், அத்தனை விமர்சனங்களையும் இந்த ஐபிஎல் தொடரில் அடித்து துவைத்து விட்டார்.
நிதானமான வேகத்துடன் அவரின் பழைய ஷாட்களைக் கண்டு ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்குத் தயாராகி விட்டனர். தோனி தோனி தோனி என மற்ற அணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஏனென்றால் அவர் தோனி. தோனி வெறியர்கள் முன்னெப்போதும் இல்லாத பெரும் மகிழ்வுடன் ஐபிஎல் தொடரைக் கண்டுகளித்து வருகிறார்கள்.
