புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் சன் பிக்சர்ஸ்.. ஓரம்கட்டப்பட்டாரா சூப்பர் ஸ்டார்?

சன் பிக்சர்ஸ் தற்போது பல திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட இதன் தயாரிப்பில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகியிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

தற்போது நாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் அனைவரும் இந்தப் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.

வரும் மார்ச் 20ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவ்விழாவில் விஜய், பூஜா ஹெக்டே உட்பட படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு என்ன கூறுவார் என்பதை காண அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த தகவலால் தற்போது ரஜினி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட அண்ணாத்த திரைப்படத்திற்கு இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் நடத்தவில்லை.

தற்போது வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது இந்த படத்திற்கு மட்டும் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் சன் பிக்சர்ஸ் ரஜினியை ஓரம் கட்டியதா என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News