fbpx
Connect with us

கடற்கரைச் சாலை… நட்சத்திர ரிசார்ட்… சொகுசு சிறையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

Politics | அரசியல்

கடற்கரைச் சாலை… நட்சத்திர ரிசார்ட்… சொகுசு சிறையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ,பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார்.. இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அ.தி.மு.க. சட்டமன்றக்குழுத்தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் முதல்வராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமாக் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றதாகச்சொல்லி பரபரப்பைக் கிளப்பினார் ஓ.பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் பேசி வருவதாகவும், மக்கள் விரும்பினால் ராஜினாமாக் கடிதத்தைத் திரும்பப் பெறுவேன் என்றும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஓரிரு எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது.

மொத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 135 பேரில், பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினார் சசிகலா. 131 எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் பட்டியலை வெளியிடவில்லை. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

100க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் சசிகலா கூட்டிய கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் கூட்டம் முடிந்த பின்னர், கட்சி அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் அனுமதிக்கப்படவில்லை. கட்சி அலுவலகத்துக்கு தனியார் ஏ.சி. பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, அதில் பாதுகாவலர்கள் புடை சூழ எம்.எல்.ஏ.க்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாவலர்களின் பாதுகாப்போடு அறையில் சிறைவைக்கப்பட்டனர். ஓரிருவர் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இடம் மாற்றப்பட்டனர். முதலில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லி பயணத்திட்டம் ரத்தானதால் எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் எம்.எல்.ஏ.க்களுடன் சுற்றித்திரிந்து இறுதியில், காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைச் சாலையையொட்டியுள்ள இந்த ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்படுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் செல்போன்களைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கவில்லை என்றும், முக்கியமான அழைப்புகள் மட்டும் பாதுகாவலர்களின் அனுமதியோடு பேச அனுமதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ரிசார்ட்டில் அனைத்து வசதிகளும் எம்.எல்.ஏ.க்களுக்குச் செய்து கொடுக்கப்படுகிறது.

இன்று மாலை தமிழக ஆளுநர் வித்யாசாகர ராவை சந்திக்க எம்.எல்.ஏ.க்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அதுவரை இவர்கள் சொகுசு சிறையில் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ஆளுநர் வருகையில் மாற்றம் இருந்தால், அதுவரை இவர்கள் சிறையிலேயே இருப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top