அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது படக்குழு.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. சித்திக் இயக்கத்தில் படம் மாஸ் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து, இப்படம் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சித்திக்கே இயக்கும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமியும், நாயகியாக அமலா பாலும் ஜோடி போட்டுள்ளனர். பேபி நைநிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசையமைத்துள்ளார். ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைக்கதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். படத்தின் வேலைகள் முடிந்து, கடந்த ஜனவரி மாதமே வெளியிட அறிவிப்புகள் வெளியாகியது.

ஆனால், இந்த வருட பொங்கல் தினத்தில் சூர்யா, விக்ரம் என பலரும் களத்தில் இருந்ததால் படத்தின் வசூலை மனதில் கொண்டு படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. இதை தொடர்ந்து, வெளியிட நேரம் சரியாக அமையாத படக்குழுவிற்கு தயாரிப்பாளர் போராட்டம் மேலும் சோதனையை கொடுத்தது.

baskar

இந்நிலையில், இப்படத்தை இந்த வார இறுதியில் அதாவது ஏப்ரல் 27ல் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கும் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ஹாலிவுட் படைப்பான “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படமும் இந்த வார இறுதியில் வெளியாக இருக்கிறது. இதனால், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பல இடங்களில் தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் படக்குழு மே 11ந் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இருந்தும், கோடை விடுமுறையில் பல படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால், இப்படம் மேலும் தள்ளிப்போகுமா இல்லை போட்டியில் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.