அமேசான் நிறுவனத்தில் வாங்கிய பொருட்களுக்கு பதிலாக போலியான பொருட்களை திருப்பி அனுப்பி 70 லட்சம் வரை ஏமாற்றிய பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை பொறுத்தவரை, வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்ட பொருளில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அடுத்த 30 நாட்களுக்குள் திரும்ப அனுப்பலாம். அதன் பின்னர் பொருளுக்காக வாடிக்கையாளர் செலுத்திய பணம், அவரது வங்கிக் கணக்கில் அமேசான் நிறுவனத்தால் திரும்ப செலுத்தப்படும்.

இந்த வசதியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வெவ்வேறு பெயர்களில் அமேசான் நிறுவனத்தில் 104 பொருட்களை கடந்த ஒரு ஆண்டில் வாங்கியுள்ளார். இந்த பொருட்களை வாங்கிய சில நாட்களிலேயே, அந்த பொருட்களில் ஏதோ குறை இருப்பதாக கூறி மீண்டும் திரும்ப அமேசான் நிறுவனத்திடமே அனுப்பியுள்ளார். ஆனால் அசல் பொருட்களுக்கு பதிலாக அதே போன்ற போலி பொருட்களை அனுப்பி அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி வந்துள்ளார். இப்படியாக சுமார் 70 லட்சம் வரையில் அவர் ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டு வந்த இளம்பெண்,சமீபத்தில் கையும் களவுமாக அமேசான் நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.