பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் என்ன வசூல், முதல் வாரம் என்ன வசூல், மற்ற நடிகர்களின் படங்களை விட வசூல் அதிகமா என்ற எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் எழுவது வழக்கம்தான். விஜய் நடித்து நேற்று வெளிவந்த ‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று முதல் நாள் முதல் காட்சி வசூலாக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். நேற்று முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாய் வரை வசூல் எதிர்பார்க்கப்படுவதாக நேற்று மாலை அறிவித்தார்கள். இன்னும் அதிகாரப்பூர்வமான முதல் நாள் வசூலை அவர்கள் அறிவிக்கவில்லை.

‘பைரவா’ படத்திற்கு சென்னையில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற்றிருக்கிறது. போட்டிக்கு வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் இல்லாததால் இந்தப் படத்தை வரும் திங்கள் கிழமை வரை பலரும் குடும்பத்துடன் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை தியேட்டர்காரர்களிடம் உள்ளது. பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திங்கள் வரை ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி சிலர் பல்வேறு விதமாக விமர்சித்தாலும் படத்தின் வசூல் லாபகரமகாவே இருக்கும் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். விஜய் படம் என்றாலே பாடல்கள் தெறிக்கும் என்பது இந்தப் படத்தில் குறையாக இருப்பதும், அழுத்தமான கதை இல்லாமல் இருப்பதும், பொதுவான ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

விஜய்யின் சிறந்த படங்கள் வரிசையில் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களுக்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த ‘தெறி’ யும் இடம் பெறவில்லை, நேற்று வெளிவந்த ‘பைரவா’ படமும் இடம் பெறவில்லை என்பதே உண்மை.

விஜய் இன்னும் வேறு மாதிரியான படங்களில் நடித்து தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை மேலும் உயர்த்தலாமே என அவருடைய ரசிகர்களே சொல்கிறார்கள்.