பாகுபலி 2 திரைப்படம் தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகளைத் தவிர வழக்கமான காலை காட்சியில் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பற்றி இந்தியத் திரையுலகில் உள்ள பலரும் ஒட்டு மொத்தமாக பாராட்டி வருகிறார்கள். இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படம் ஒரு புதிய சாதனையைப் படைக்கப் போவது உறுதி என்பது ஒருமித்த குரலாக ஒலித்து வருகிறது.

பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பின் தெலுங்குத் திரையுலகில் பாகுபலி படத்திற்கு முன், பின் என மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் வசூல் சாதனையைக் குறிப்பிட்டு வந்தார்கள். இனி, இந்தியத் திரையுலகில் பாகுபலி 2 படத்திற்கு முன், பின் என மற்ற நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களைப் பற்றிக் குறிப்பிடப் போகிறார்கள்.

தெலுங்குப் படங்களின் முக்கிய வெளியீட்டு நகரமான ஐதராபாத்தில் இரண்டு தியேட்டர்களைத் தவிர மற்ற தியேட்டர்கள் அனைத்திலும் பாகுபலி 2 படம்தான் திரையிடப்பட்டுள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களிலும் பெரும்பாலபான தியேட்டர்களிலும் இதே நிலைமைதான். ஏன், தமிழ்நாட்டில் கூட பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பாகுபலி 2 தான் ஆக்கிரமித்துள்ளது. எனவே, பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த 100 கோடியை விட அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களிலும் சுமார் 50 கோடியும், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மற்ற தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 30 கோடியும், வட இந்திய மாநிலங்களில் 30 கோடி ரூபாயும் என இந்திய வசூல் மட்டும் 110 கோடி வசூலிக்கும் என ஒரு கணக்கு சொல்கிறார்கள். வெளிநாட்டு வசூல் குறைந்த பட்சம் 30 கோடி என்றால் கூட 140 கோடி ரூபாயை முதல் நாளில் வசூலித்துவிடுமாம். அதனால், முதல் நாள் ஷேர் மட்டுமே 100 கோடியைக் கடந்து இந்தியத் திரையுலக முதல் நாள் வசூலில் புதிய சாதனையைப் படைக்கும் என்கிறார்கள்.