Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிலிம்பேர் விருதுவிழாவால் பாகுபலிக்கு வந்த சோதனை.!
ஒரு விருது கூட கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பாகுபலி நாயகன்
திரைப்பட கலைஞர்களின் கௌரவமாக கருதப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவில் ஹிட் நாயகன் பிரபாஸுக்கு எந்த விருதும் கிடைக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் திரைப்பட கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழி திரைப்படத்துறைக்கும் தனித்தனியான விருதுகளும், அனைத்திற்கும் சேர்த்து பொதுவான விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1953ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு 1954ம் ஆண்டு முதலாக கொடுக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விருது சில ஆண்டுக்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் 65- ஆவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்கள் விருதுகளை வென்றுள்ளனர். ஆனால் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், தன் திருமணத்தை கூட இப்படத்திற்காக தள்ளி வைத்தார். தினமும் பல பயிற்சிகளை எடுத்து கொண்டார். ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? எனச் சோகத்துடன் சமூக வலைத்தளத்தில் ட்வீட் தட்டி வருகிறார்கள். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான படம் பாகுபலி. இரண்டு பாகமாக வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படத்தின் வரவேற்பால் வசூல் இமால அளவில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
