அனுஷ்காவுக்கு செய்யும் அத்தனை அர்ச்சனை பூ பழங்களையும் அழகு மயில் நயன்தாராவுக்கு சார்த்தி விடுவதே நல்லது. ஏன்? முதலில் பாகுபலி படத்தில் நடிக்க அழைக்கப்பட்டவர் நயன்தாராதான். அப்போதிருந்த கால்ஷீட் பிஸி…. மற்றும் காதல் பிஸி காரணமாக அப்படத்தை மறுத்த நயனுக்கு, இப்போது கொள்ளை கொள்ளையாக குழப்பம். தானா வந்து மடியில விழுந்த வாய்ப்பை, இப்படி நானே கெடுத்துக் கொண்டேனே என்ற கவலைதான் அது.

இப்போது அதே கவலைக்கு அதே டப்பாவில் நிவாரணம். எப்படி? எப்படி?

சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் விலகியோ, அல்லது விலக்கப்பட்டோ ஒரு பெரும் குழப்பம் நிலவி வருகிறதல்லவா? அந்த இடத்தை நிரப்ப, ஒரு ராஜகுமாரியை தேடிக் கொண்டிருக்கிறார் சுந்தர்சி. வாள் சுழற்ற வேண்டும். குதிரை ஏற வேண்டும். சமயங்களில் குப்புற விழுந்து விழுந்து மல்லாக்க புரண்டு மல்யுத்தமெல்லாம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் தோதாக ஒரு இளம் குயில் வேண்டும் என்று தவியாய் தவிக்கும் அவருக்கு, ஹன்சிகா எப்படியிருப்பார் என்றெல்லாம் யோசனை வந்ததாம். அவரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறுகிறார்கள்.

இதற்கிடையில் அவரைவிட சிறப்பாக நயன்தாரா இருப்பார் என்று இவருக்கும் தூது விட்டிருக்கிறார்களாம். கொடி மாதிரி மெலிந்து தன் கையே  தனக்கு பளு என்கிற அளவுக்கு பலவீனமாக இருக்கும் நயன், இந்த கேரக்டரில் நடிப்பாரா? இந்த அழைப்பை பயன்படுத்திக் கொள்வாரா? பாகுபலியில் விட்டதை சங்கமித்ராவில் பிடிப்பாரா? இப்படி ஓராயிரம் கேள்விகள்.