இயக்குனர் ராஜமவுலியின் பாகுபாலி பாகம்-1ன் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாகம்-2 ஏப்ரல் 28-ம் தேதி ரிலீசானது. ரிலீசான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே 121 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் இயக்குனர் ராஜ மவுலியின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது முன்னணி நட்சத்திரங்களாக கொடி கட்டிப்பறக்கும் பிரபாஸ், ரானா டாகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் பாகுபலி-1 சூட்டிங் ஆரம்ம்பித்தபோது தங்களுக்கென்று அடையாளம் ஏதும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமா துறையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தான் ராஜமவுலி தனது கனவு திரைப்படமான பாகுபலிக்காக இவர்களை தேர்வு செய்தார். இன்று உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து உச்சபச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் இவர்களது ஆரம்பகால சினிமா வாழ்க்கை மற்றவர்களைப்போலவே வேதனையும், ரணங்களும் நிறைந்தவையாகத்தான் இருந்தன. இவர்களை சினிமாத்துறை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. பாகுபலி நட்சத்திரங்கள் கடந்து வந்த பாதையை தற்போது காண்போம்.

பிரபாஸ் பாகுபலியாக மாறியது எப்படி?

பாகுபலி படத்தில் பிரபாஸ் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னாள், தெலுங்கு திரையுலகில் ஒரு சாக்லேட் பாயாகவே வளம் வந்தார். அவர் முதலாவதாக நடித்த ஈஸ்வரும், அதனைத் தொடர்ந்து வெளிவந்த ராகவேந்திராவும் படு தோல்வி அடைந்தன. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரபாஸ்க்கு மூன்றாவது படமான வர்ஷம் கைகொடுத்தது. வர்ஷம் திரைப்படம் அவருக்கு அடையாளம் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து பிரபாஸ், அஜய் தேவ்கான், சொனாக்ஷி சின்ஹா நடித்த “ ஆக்ஷன் ஜாக்சன்” என்ற பாலிவுட் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அதன் பின்னரே அவருக்கு பாகுபாலி வாய்ப்பு கிடைத்தது.

சாக்லேட் பாயாக இருந்த பிரபாசை பாகுபலிக்காக முரடனாக்கும் பொறுப்பு 2010ம் ஆண்டு மிஸ்டர் வோல்டு பட்டம் பெற்ற லக்ஷ்மன் ரெட்டியிடம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜிம் எக்யூப்மென்ஸ் வாங்கி பிரபாஸ் வீட்டிலேயே சகல வசதிகளும் கொண்ட ஜிம் அமைக்கப்பட்டது. 82 கிலோ எடை இருந்த பிரபாஸின் உடலை செதுக்கி 102 கிலோ ஆஜானுபாகுவான  தோற்றத்துடன் பிரபாசை வடிவமைத்த பெருமை லக்ஷ்மன் ரெட்டியையே சேரும்.

கட்டப்பா சத்தியராஜ்

1978ம் ஆண்டு சட்டம் என் கையில் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சத்தியராஜ். 1987ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த “வேதம் புதிது“ திரைப்படத்திற்காக இவருக்கு ஃபிலிம்பேர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த சத்தியராஜ் 2013ம் ஆண்டு சாருக்கான் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனுக்கு அப்பாவாக தோன்றி படம்  முழுவதும் மிரட்டி இருப்பார்.

இந்நிலையில், பாகுபலி-2 ரிலீஸ்க்கு சில நாட்களுக்கு முன்பு யாரும்  எதிர்பாராத வகையில் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. 2008ம் ஆண்டு தமிழ் திரையுலகினர் காவிரி நதிநீரை திறந்துவிடக்கோரி கர்நாடகாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது பலரும் தங்களது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்தனர். நடிகர் சத்தியராஜும் தனது கருத்தை பதிவு செய்தார். இதனை காரணம் காட்டி கன்னட சலுவாலிய அமைப்பினர் மற்றும் வாட்டாள் நாகராஜ் ஆகியோர்  சத்தியராஜ் மன்னிப்பு கேட்கும் வரை பாகுபலி-2 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினர். ஆனால் சத்தியராஜ் தனது நிலையில் இருந்து கீழ் இறங்காமல் தாம் ஒரு நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதையே விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு திரைப்படம் வெளியானது.

யோகா டீச்சர் அனுஷ்கா செட்டியாக மாறிய கதை

யோகா டீச்சராக தனது கேரியரை ஆரம்பித்த அனுஷ்கா செட்டி அவரது யோகா குறு பரத் தாக்கூர் அறிவுரையின் படி சினிமாவிற்குள் நுழைந்தார். தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்த அவருக்கு 2006ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த விக்ரமக்கூடு திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து அவர் நடித்த பில்லா மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது தென்னிந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலாவதாக இருக்கிறார் அனுஷ்கா.

ரானா டாகுபதி

பாகுபலி-2ல் ரானா டாகுபதி தனது தோற்றத்திற்காக 110 கிலோ எடையை ஏற்றினாராம். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். தினமும் 40 அவித்த  முட்டைகள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பார்ப்பதற்கு கொடூரமான வில்லனாக காட்சியளிக்கும் ரானா உண்மையில் மென்மையான மனம் படைத்தவராம். திரைப்படங்களில் சோகக் காட்சிகள் ஏதாவது வந்தால் தேம்பி தேம்பி அழுவாராம். மேலும் சென்னை, ஆந்திராவில் சென்ற ஆண்டு வெள்ளம் வந்தபோது பொதுமக்களுக்கு தேடித் தேடி போய் உதவி செய்திருக்கிறார்.

கலக்கேயா பிரபாகர்

திறமையான நடிகரான பிரபாகர் பாகுபலி-1ல் அரக்க குணம் படைத்த ஒரு கூட்டத்தின் தலைவனாக இருப்பார். ஆரம்ப காலத்தில் நல்ல நடிகரான இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டன. இதனால் ஒருகட்டத்தில் மனம் உடைந்த அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அதிர்ஷட வசமாக  உயிர் பிழைத்த அவர் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து அங்குள்ள கால் சென்ட்டரில் வேலைக்குச் சென்றார். ராஜஸ்தானில் நடைபெற்ற மகாதீரா படபிடிப்பின் போது இவரது நடிப்பை கண்ட ராஜமவுலி அவரை அழைத்து பாகுபலியில் வரும் அரக்கன் வேடத்தை அளித்தார். அது பிரபாகருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. அதையடுத்து இப்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.