நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததை அடுத்து பாகுபலி படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் பாகுபலி 2 திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும், 28ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கன்னட சலுவாளி அமைப்பு உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன. சுமார் 9 வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ் நடிகர்களின் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சத்யராஜ் கன்னடர்கள் பற்றியும், கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பற்றியும் தவறாக பேசியதால் அவர் நடித்த பாகுபலி 2 படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தனர்.

அதிகம் படித்தவை:  கண்ணாமூச்சி ஆடும் கெளதம் மேனன்? திரையுலகினர் அதிர்ச்சி..!!!!

இதனையடுத்து நடிகர் சத்யராஜ் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து ஏப்ரல் 28ஆம் தேதி சத்யராஜூக்கு எதிராக நடக்கவிருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியிருக்கிறார். மேலும் இது போல் சத்யராஜ் இனி பேசக்கூடாது என்றும் வாட்டாள் நாகராஜ் கூறியிருக்கிறார். ஏப்ரல் 28ஆம் தேதி கர்நாடகாவில் பாகுபலி படம் திரையிடப்படுவதில் எந்த தடையும் இல்லை என்றும் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.