‘பாகுபலி’ முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த டிரைலர் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இப்படத்தின் வியாபாரம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்தியா முழுக்க ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை குறிப்பிடவில்லை.

இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘ஐமேக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்டமான வீடியோ வடிவில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே இந்திய படங்களில் ‘தூம் 3’, ‘பாங்க் பாங்க்’ ஆகிய இந்தி படங்கள்தான் ‘ஐமேக்ஸ்’ வீடியோ வடிவில் வெளியாகியிருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படம் ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.