சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சென்று அய்யாக்கண்ணு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதியன்று தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 41 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தினம் தினம் வெவ்வேறு வடிவில் விவசாயிகள் போராடி வந்தனர். பிரதமர் மோடியை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் அறிவித்த விவசாயிகள், திடீரென தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்தனர். எனினும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து அய்யாக்கண்ணு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க முதல்வரிடம் அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது.