Tamil Cinema News | சினிமா செய்திகள்
எங்களுக்கு விருதே வேண்டாம்.! 65வது தேசிய விருதை புறக்கணிக்கும் வெற்றியாளர்கள்.
தேசிய விருது பெற்ற வெற்றியாளர்கள் விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு தரப்பில் விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதை ஜனாதிபதி தன் கையில் எல்லா வெற்றியாளர்களுக்கும் கொடுப்பார். இது தான் 65 வருடமாக நடைபெற்று வரும் நடைமுறையாகும்.
65வது தேசிய விருது வெற்றியாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அதன், விருது விழா இன்று நடைபெற இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல், சிறந்த படம், சிறந்த இசை, தாதா சாகேப் பால்கே உட்பட 11 விருது பெறுபவர்களுக்கு மட்டுமே ஜனாதிபதி நேரடியாக விருதுகளை வழங்குவார். மற்ற விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் விருது வாங்கிய மற்ற கலைஞர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், தமிழில் விருது பெற்ற டூலெட் படத்தின் இயக்குனர் செழியன் உள்பட 68 பேர் விருது விழாவை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய விருது மரபை மீறி விட்டதாக புகார் தெரிவித்தனர். ராம்நாத் கோவிந்தே விருதை தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், விருது விழாவில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவில்லை. இதனால், எல்லாருக்கும் ஸ்மிருதி இரானி மற்றும் விஜய ரதோர் விருதுகளை வழங்கி வருகின்றனர். பங்கேற்காத கலைஞர்களின் இருக்கைகள் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
