75 வருடமாக தமிழ்சினிமாவில் மதிக்கத்தக்க தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்த ஏவிஎம் நிறுவனம் சமீபகாலமாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி விட்டது. இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது இந்த நிறுவனம் தான்.
சங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான சிவாஜி, சூர்யாவின் அயன் போன்ற இரண்டு படங்கள் மட்டுமே கடைசியாக ஏவிஎம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.
பின்னர் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான வேட்டைக்காரன், முதலிடம், இதுவும் கடந்து போகும் போன்ற படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்தன. இந்நிலையில் கடந்த 6 வருடமாக எந்த ஒரு படத்தையும் தயாரிக்காமல் இருந்த ஏவிஎம் நிறுவனம் தற்போது மீண்டும் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகிறது.
ஆனால் இந்த முறை திரைப்படத்திற்கு பதிலாக ஒரு வெப்சீரிஸ் ஒன்றின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாம். இந்தியில் பிரபல பெரிய தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் சேர்ந்து பிரபல இயக்குநர் அறிவழகன் என்பவர் இயக்கத்தில் தமிழ் ஸ்டாக்கர்ஸ் என்ற பெயரில் ஒரு வெப்சீரிஸை தயாரிக்க உள்ளது.
அறிவழகன் ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவர். அதனடிப்படையில் திரைத் துறையில் நடக்கும் திருட்டுக்களை தோல் உரிக்கும் வகையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

ஏவிஎம் சரவணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியிலேயே முன்புபோல் படம் தயாரிப்பில் பெரிய அளவில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை எனவும், நடிகர்களும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பதில்லை எனவும் கூறி வருத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.