ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து 155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது.

260 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 285 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டனாது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து 441 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியது போல் இந்த இன்னிங்ஸிலும் கேப்டன் கோஹ்லி உள்பட அனைத்து வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒகெஃபே முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.