சரமாரி தாக்குதல்.. இஸ்ரேலை பழிவாங்கத் துடிக்கும் இரான்.. 3 ஆம் உலகப்போர் மூளுமா?

இஸ்ரேல் நாட்டின் மீது இரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 3 ஆம் உலகப் போருக்கான தொடக்கமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பின் இஸ்ரேல் – காசா இடையிலான போர் முற்றியது. இந்த நிலையில், இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக 60 வயதான ஹமாஸ் அமைப்பின் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’ தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

இதையடுத்து, தங்கள் நாட்டிற்கு விருந்தினராக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரை கொன்றதற்காக இஸ்ரேலை பழிவாங்கப் போவதாக இரான் கூறியிருந்தது. ஹனியேவின் இறப்பிற்குப் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளில் பதற்றம் நீடித்து வந்தது. இதையடுத்து, இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியிருந்தார்.

ஏற்கனவே காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில், இப்படுகொலையின் காரணமாக காசாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக லெபனான் தீவிரவாத அமைப்பு ஹெஸ்புல்லா தன் செய்தி இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஹனியேவின் படுகொலைக்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக பகிரங்கமாக இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும் கூறியிருந்தார்.

இவ்விவகாரம் பெறும் அச்சத்தை ஏற்படுத்தி 3 ஆம் உலகப் போர் மூளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையில் போர் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக,லெபனானின் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகள் வெடிக்க வைத்து வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டன. இதில், 1300 பேர் பலியான நிலையில், அங்கிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, பெய்ரூட்டில் பதுங்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ‘ஹசன் நஸ்ரல்லாவை’ இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொன்றதுடன் அந்த அமைப்பின் தளபதிகளையும் அழித்தது. இதைத்தொடர்ந்து, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்ள பகுதிகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஹசன் கொல்லப்பட்டதற்கு ரஷ்யா கண்டனம் கூறியது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து, உதவி செய்து வரும் நிலையில், ஏற்கனவே உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் உதவி செய்யும் எனத் தெரிகிறது.

மேலும், காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானின் உள்ள ஹிஸ்புல்லா, ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவ்விவகாரத்தில் ‘ஹமாஸ்’, ‘ஹிஸ்புல்லா’, ‘ஹவுதி’ ஆகிய அமைப்புகளை இரான் ஆதரித்து வருகிறது. எனவே ஏற்கனவே ஹனியே கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், தற்போது இஸ்ரேல் இந்த அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக, நேற்று, செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை இரான் தொடங்கியது.

100க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது பெரும் பதற்றத்தை உண்டாகியுள்ளது.

இரான் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியானதாகவும், இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும், குண்டு துளைக்காத இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த இரு நாடுகளின் பழிவாங்கலால் அடுத்து 3 ஆம் உலகப் போர் மூளுமோ என்ற அபாயம் எழுந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News