ரியாலிட்டி ஷோ மூலம் பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதாக அறிவித்த ஆர்யா, கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்தார். இது பலரின் அதிருப்தியை சந்தித்தது.

arya
arya

இந்தியில் பிரபலமான நிகழ்ச்சி சுயம்வர். பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் துணையை நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுப்பர். அவர்களுடன் டேட்டிங் செல்வர். சில காலம் கழித்து இருவருக்கும் மன கசப்பு எனக்கூறி பிரிந்து விடுவர். இதனால் தான் என்னவோ பல சீசன்களை தாண்டி அந்நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஜோடியும் திருமணம் வரை செல்லவில்லை. அந்த தொலைக்காட்சி சமீபத்தில் தான் தமிழில் ஒளிபரப்பை தொடங்கியது. அதே நிகழ்ச்சியை எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் தயாரித்தது. முன்னதாக, ஆர்யா தன்னை கல்யாணம் செய்ய விரும்பும் பெண்கள் இந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். அதில் தொடர்பு கொண்டால் ஒரு இணையத்தள முகவரி அனுப்பப்பட்டது. அதில் திருமணத்திற்கு தேவையான எல்லா தகவல்களும் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பலர் ஆர்யாவை திருமணம் செய்யும் ஆசையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். முடிவில், 7000 பெண்கள் பதிவிட்டு இருந்ததாக தயாரிப்பு குழு அறிவித்தது.

அதில், ஆர்யாவிற்கு தகுதியுடைய 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டது. தொடங்கும் முன்னரே பல எதிர்ப்புகளை சந்தித்தாலும், ஆர்யா நெகடிவ் இமேஜ் உருவாகும் என கருத்தில் கொண்டு திருமணம் செய்வார் எனவே எதிர்பார்க்கப்பட்டது. பல டாஸ்குகள் வைக்கப்பட்டு வாரம் ஒரு பெண்ணை சில பல காரணம் சொல்லி ஆர்யா வெளியேற்றி வந்தார். இதனால், நிகழ்ச்சியும் சூடு பிடித்தது. நமக்கு தான் ஒரு நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர்களுக்கு ரசிகர்களாகும் பழக்கும் இருக்கிறதே. அதன்படி, தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என இணையத்தளங்களில் போட்டி கிளம்பியது.

இறுதியில், கோயம்புத்தூரை சேர்ந்த சுவேதா, கும்பகோணத்தை சேர்ந்த அபர்ணதி, கேரளாவை சேர்ந்த சீதாலட்சுமி, அகாதா, கனடாவை சேர்ந்த சுசானா தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு சென்று உறவினர்களுடன் பழகினார் ஆர்யா. அதை தொடர்ந்து, தன்னால் சுவேதாவை கஷ்டப்படுத்த முடியாது. அவர் என் தோழி என நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். தொடக்கம் முதலே காதல் கப்பலில் மிதந்த அபர்ணதியும் காதல் எண்ணம் தோன்றவில்லை என அவரும் வெளியேறினார். பிறகு போட்டியில் இருந்தவர்கள் சுசானா, அகாதா, சீதா. இவர்களுக்கு திருமண வைபோகத்திற்கு பட்டுப்புடவைகள், நகைகள் பரபரப்பாக வாங்கப்பட்டது. மெஹந்தி நிகழ்ச்சி, சங்கீத் என கோலாகமாக நடைபெற்றது. இதை பார்த்த பலர், கண்டிப்பாக ஆர்யா திருமணம் நடக்கும் என அடித்து கூறினர்.

போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நாளும் வந்தது. மூன்று மணப்பெண்களும் மேடைக்கு வந்தனர். ஆர்யா யாரை அறிவிக்க போகிறார் என பரபரப்பு பலர் மனதில் தொற்றியது. ஆனால், ஷாக் கொடுக்கும் விதமாக, ஒருவரை தேர்வு செய்தால் மற்ற இருவரும் வருத்தப்படுவார்கள். இதனால், தன்னால் இப்போது அறிவிக்க முடியாது என ஷாக் கொடுத்தார். எல்லார் முகத்திலும் சோகம். அதிலும் மணப்பெண்கள் சற்று ஆடித்தான் போனார்கள். நேரம் வேண்டும் எனக்கேட்டு கொண்டதால் பலர் நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

arya

இந்நிகழ்ச்சி முடிந்து 15 நாட்களை தாண்டிய நிலையிலும், ஆர்யாவிடம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஆர்யாவின் தாயாருக்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லையாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு ஆர்யாவின் முறைப்பெண்ணை மணமுடிக்க வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது, இறுதி போட்டியாளர்களை சற்று களக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும், இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இருந்த சுசானாவின் தந்தை தான் பெரும் சோகத்தில் இருக்கிறாராம். மீண்டும் களைக்கட்டி இருக்கும் இந்த தகவல்களுக்கு ஆர்யாவின் பதிலே முற்றுப்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.