தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரியாமல் இருந்த கூட்டணி விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா. இந்த நால்வரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

மாமா மச்சான் என்று அழைத்துக்கொண்ட இவர்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவியை எதிர்த்துக் கேள்வி கேட்க முடிந்தது.

எல்லாம் சிவகுமார் குடும்பத்துடன் விஷால் நட்பு பாராட்ட ஆரம்பிக்கும் வரைதான். ஆமாம், சங்க தேர்தலுக்கு சூர்யா, கார்த்தி ஆதரவுக்காக சூர்யா குடும்பத்துடன் விஷால் நெருக்கமானார். அதன் பின்னர் சிறிது சிறிதாக ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா க்ரூப் விலக ஆரம்பித்தது. தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டிய இக்குழுவில் ஜெயம் ரவியெல்லாம் மதியத்துக்கு மேல் தான் ஓட்டுப் போடவே வந்தார்.

நடிகர் சங்க கிரிக்கெட்டில் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அந்த மேட்ச்களின் முடிவுகளில் ஃபிக்ஸிங் நடந்துள்ளது என்று செய்திகள் வந்தன.

ஆர்யாவும் விஷாலும் பிரிவதற்கு விஷ்ணு நடித்த ஜீவா படம் தான் காரணம் என்கிறார்கள். அந்த படத்தை ஆர்யா தயாரிக்க, விஷால் வெளியிட்டார். அதில் ஆரம்பித்த பண விவகாரம்தான் இது என்கிறார்கள்.

இப்போது நடிகர் சங்க கட்டட நிதிக்காக எடுக்கப்படும் படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஓகே சொல்லியிருந்த மூவரும் இப்போது விலகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் விஷாலும் கார்த்தியும் மட்டுமே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். எல்லா இளம் ஹீரோக்களும் இணைந்து நடித்தால் அந்த படத்துக்கான மார்க்கெட் வேறு. இரண்டு ஹீரோக்கள் மட்டும் இணைந்து நடித்தால் அந்த மார்க்கெட் வேல்யூ குறைவாகிவிடும்.

இதனால் சூர்யாவும் ஒரு சின்ன வேடத்தில் இணைவார் என சொல்கிறார்கள். இந்த பட முயற்சி எப்படி வருகிறது என்று பார்ப்போம்…!