கெட்டது செய்ய தான் ஜாதி தேவை, நல்லதுக்கு இல்ல.. இன்றைய அரசியலை தாக்கிய அருண்ராஜா காமராஜ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமுதாயம் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஆரி, தன்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அருண்ராஜா கலந்து கொண்ட ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் படத்தின் இயக்குனர், அரசியல் குறித்து பல விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளார்.

இப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதில் ஒரு பிராமணர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவது போன்று காட்டப்பட்டிருக்கும். அந்தப் படம் வெளியான சமயத்தில் இது மிகப்பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

அதை பற்றி பேசி இருக்கும் இயக்குனர், மக்களுக்காக ஒருவர் நல்லது செய்கிறார் என்றால் அதற்கு ஜாதி தேவை இல்லை. எந்த பின்புலத்தில் வந்தவராக இருந்தாலும் அவர்கள் நினைத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கெட்டது செய்ய தான் ஜாதி தேவை, நல்லது செய்ய ஜாதி தேவையில்லை. ஏனென்றால் இப்போது அதை வைத்தே அரசியலாக்கி, வியாபாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அதனால் ஹிந்தியில் ஹீரோ பிராமணர் போன்று காட்டி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய காலகட்டத்தில் உயர்ஜாதி வர்க்கத்தினரால் ஈசியாக தன்னுடைய இலக்கை அடைந்துவிட முடியும். அதுவே ஒடுக்கப்பட்டவராக இருந்தால் தன்னுடைய இலக்கை நோக்கி அவர் செல்வதே பெரிய சாதனைதான். அதை கூற வேண்டும் என்றால் அதுவே ஒரு தனி திரைப்படமாக எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றைய அரசியல் குறித்து அவருடைய தெளிவான சிந்தனையும், பேச்சின் ஆழமும் ஆத்மார்த்தமாக இருக்கிறது. அதிலும் ஒரு அரசியல்வாதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர் இப்படி பேசுவது மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

சமீப காலமாக இதுபோன்ற அரசியல் சிந்தனை கொண்ட படங்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் அருண்ராஜா சரியான நபரைத் தான் இந்த படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதனால் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பைக் காண அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்